கோலாலம்பூர் : நாட்டின் எதிர்க்கட்சிக் கூட்டணியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் விரிசல்கள் தோன்றியுள்ளன. பெர்சாத்து கட்சியின் தலைமைச் செயலாளர் அஸ்மின் அலியை, பெரிக்காத்தான் கூட்டணியின் தலைமைச் செயலாளராக கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நியமித்தார். அதைத் தொடர்ந்து, பாஸ் கட்சியைச் சேர்ந்த திரெங்கானு மந்திரி பெசார் அகமட் சம்சூரி மொக்தார் அந்தக் கூட்டணியின் பொருளாளர் பதவியிலிருந்து விலகினார்.
இதற்கிடையில் சபாவின் எஸ்ஏபிபி கட்சியும் பெரிக்காத்தான் கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.
கூட்டணி தலைவர் முஹிடின் யாசின் தலைமைத்துவத்தின் மீது பாஸ் அதிருப்தி கொண்டிருக்கிறது என்பதையே அகமட் சம்சூரியின் பதவி விலகல் காட்டுகிறது.
பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவர் ஹம்சா சைனுடின் பெரிக்காத்தான் கூட்டணி துணைத் தலைவராகவும் உதவித் தலைவர் அகமட் பைசால் அசுமு பெரிக்காத்தான் தகவல் பிரிவு தலைவராகவும் பெர்சாத்து மகளிர் பிரிவு தலைவி மாஸ் எமியாதி சம்சூடின் பெரிக்காத்தான் கூட்டணியின் மகளிர் தலைவியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெரிக்காத்தான் கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல்களால் பாஸ் கட்சி அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.