(சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில் கலந்துகொண்ட இரா.முத்தரசன் வழங்கும் அந்த மாநாடு குறித்த கண்ணோட்டம்)
சென்னை : கடந்த ஜனவரி 11, 12-ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் கோலாகலமாக நடைபெற்ற முடிந்த அயலகத் தமிழர் தினக் கொண்டாட்ட மாநாட்டில் பல சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், சில குறை கூறல்களும் இருந்தன என்பதை மறுக்க முடியாது.
டி-சட்டை அணிந்து வந்த உதயநிதி ஸ்டாலின்
மாநாட்டில் கலந்து கொண்ட பல பேராளர்கள் பல நாடுகளில் இருந்து வந்தாலும் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்தனர். குறிப்பாக மலேசியப் பேராளர்கள்.
ஆனால், மாநாட்டைத் திறந்து வைக்க வந்த உதயநிதி ஸ்டாலினோ கால்சட்டையுடன் (பாண்ட்) வெள்ளை நிற டி-சட்டை (T-Shirt) அணிந்து வந்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. பேராளர்களை அவமதிக்கும் வகையில் அவரது ஆடை அணிவிப்பு அமைந்திருந்தது என பல பேராளர்கள் கருத்துப் பரிமாறிக் கொண்டதைக் காண முடிந்தது.
உள்ளூர் நிகழ்ச்சிகளில், தனது சொந்த தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் உதயநிதி டி-சட்டை அணிந்து வருவது அவரின் எளிமையைக் காட்டலாம். ஆனால், அனைத்துலக அளவில் பேராளர்கள் கலந்து கொள்ளும் ஒரு விழாவிலும் டி-சட்டை அணிந்து வருவது நியாயமா? முறையா? என்பதை உதயநிதி யோசிக்க வேண்டும். பல பேராளர்கள் இந்தக் கருத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்தினர்.
சிறப்பான உணவு ஏற்பாடுகள்
மாநாட்டில் உணவு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன. பற்றாக்குறை இல்லாமல் எல்லாப் பேராளர்களுக்கும் தாராளமாக உணவுகள் பரிமாறப்பட்டன. இரண்டாவது, மூன்றாவது முறை சென்று உணவு கேட்டவர்களுக்கும் சலிக்காமல் பணியாளர்கள் உணவு பரிமாறினர்.
ஈர்க்கும் நிகழ்ச்சிகள் இல்லை
உலக அளவில் திரண்டு வந்த தமிழர்களை ஈர்க்கவோ, அவர்களைக் கட்டிப் போட்டு இருக்கைகளில் அமர வைக்கவோ நிகழ்ச்சிகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
மாலை வேளைகளில் உள்ளூர் சினிமாக் கலைஞர்களையும், நாட்டுக்கு ஒருவரென அனைத்துலகக் கலைஞர்களையும் கொண்டு கலை நிகழ்ச்சிகள் படைத்திருக்கலாம். பேராளர்கள் திரண்டு வந்திருப்பார்கள்.
ஒரிரு கலந்துரையாடல் அரங்கங்களும் உரைகளும் அனைத்துத் தரப்பினரையும் ஈர்க்கும் விதமாக இல்லை. இதன் காரணமாக, மைய நிகழ்ச்சி காலையில் முடிந்ததும் பெரும்பாலான பேராளர்கள் மதிய உணவை முடித்துக் கொண்டு மாநாட்டு வளாகத்தில் இருந்து வெளியேறி விட்டனர்.
ஸ்டாலின் விடுத்த முக்கிய அறிவிப்பு – 10 கோடி நிதி ஒதுக்கீடு
இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அனைத்துலகத் தமிழர் பிரமுகர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்த ஸ்டாலின், தொடர்ந்து நிகழ்த்திய உரையில் தமிழ் மொழி, நாட்டுப்புறக் கலைகள், தமிழ் பண்ணிசைகளை 100 ஆசிரியர்களைக் கொண்டு நேரடியாகப் பயிற்றுவிக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என ஸ்டாலின் தனதுரையில் அறிவித்தார்.
இது வரவேற்கத்தக்க அறிவிப்பு. குறிப்பாக மலேசியாவிலேயே இதுபோன்ற தமிழர் பாரம்பரியக் கலைகளை கற்றுத் தேர்ந்தவர்களும் அரிது. அதனைக் கற்பிப்பவர்களைக் காண்பதும் அதனினும் அரிது. எனவே, இந்தத் திட்டம் முறையாக அமுல்படுத்தப்பட்டால் மலேசியாவிலும் தமிழர்கள் தங்களின் பாரம்பரியக் கலைகளை தமிழ் நாட்டு நிபுணர்களைக் கொண்டு கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளை அவர்கள் பயில்வதற்கும், கற்றுத் தேர்ந்து பரப்புவதற்கும் தமிழ் நாடு அரசு தேவையான உதவிகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கும் என தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பேராளர்களின் பலத்த கைத்தட்டலையும் பெற்றார்.
பல்வேறு திட்டங்களை அயலகத் தமிழர்களுக்காக தமிழ் நாடு அரசாங்கம் செயல்படுத்தி வருவதாகவும், அயலகத் தமிழர்களை தமது அரசாங்கம் எப்போதும் பாதுகாக்கும் என்றும் ஸ்டாலின் உறுதி வழங்கினார்.
உலக நாடுகளில் இருந்து பல பேராளர்கள் இந்த இரண்டு நாள் மாநாட்டில் கலந்து சிறப்பித்தனர். மாநாட்டில் கலந்து கொண்ட சில மலேசியப் பேராளர்களின் படக் காட்சிகளை இங்கே காணலாம்: