Home இந்தியா ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல்: திமுக-நாம் தமிழர் மோதல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல்: திமுக-நாம் தமிழர் மோதல்

68
0
SHARE
Ad
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமார்

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட நிலையில், திமுக-நாம் தமிழர் இடையிலான மோதலாக இந்த இடைத் தேர்தல் உருவாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) நிறைவு பெறுகிறது. திமுக வேட்பாளராக  சந்திரகுமார் – நாம் தமிழர் கட்சியின் (நாதக) சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகக் களம் காண்கின்றனர்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் நாம் தமிழர் வேட்பாளர் சீதாலெட்சுமி

2021 சட்டமன்ற தேர்தலின்போது ஈரோடு கிழக்கு தொகுதியில், திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்ததை அடுத்து நடைபெற்ற இடைத்தேர்லில் காங்கிரஸ் மூத்த தலைவரும், காலமான திருமகன் ஈவெராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

அண்மையில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் உடல்நலக்குறைவால் காலமானார். அதைத் தொடர்ந்து நடைபெறும் இடைத் தேர்தலில் காங்கிரசுக்கு பதிலாக திமுக இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறது.

பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறும். பிப்ரவரி 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். பரபரப்பான டில்லி தேர்தலும் இதே தேதிகளில்தான் நடைபெறுகிறது.

திமுக கொள்கைப் பரப்பு இணைச்செயலாளராக இருக்கும் சந்திரகுமார் முன்பு விஜயகாந்தின் தேமுதிக கட்சியில் இருந்து திமுகவுக்கு மாறியவர்.