Home நாடு பிகேஆர்: தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிருக்காது – ஷாம்சுல் இஸ்கண்டார் கூறுகிறார்!

பிகேஆர்: தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிருக்காது – ஷாம்சுல் இஸ்கண்டார் கூறுகிறார்!

47
0
SHARE
Ad
ஷம்சுல் இஸ்கண்டார் (கோப்புப் படம்)

ஈப்போ: இந்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் பிகேஆர் கட்சியின் தேர்தல்களில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு போட்டியிருக்காது என்ற சூழல் நிலவுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் உயர்நிலை அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ ஷம்சுல் இஸ்கண்டார் கூறியுள்ளார்.

பிகேஆர் கட்சியின் அனைத்துலகப் பிரிவின் தலைவருமான ஷம்சுல், கட்சிக்குள் பல்வேறு மட்டங்களில் நடைபெற்ற ஆலோசனைகள், பெறப்பட்ட கருத்துகள்,  உள் விவாதங்களின் அடிப்படையில் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“கட்சியின் உள் நிலைத்தன்மையை பராமரிப்பதும், சுமார் இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கும் அடுத்த பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கான சேவையை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும். போட்டியை தடுக்கும் அதிகாரப்பூர்வ முடிவு எதனையும் கட்சி எடுக்கவில்லை. ஆனால் தலைமைக்கான முக்கிய விவகாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விவாதங்களை மேற்கொள்கிறோம்,” என்றார் அவர்.

#TamilSchoolmychoice

இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 1) ஈப்போவின் எஸ்கே மேரு ராயாவில் நடைபெற்ற தம்புன் நாடாளுமன்றத் தொகுதியின் “பள்ளிக்குத் திரும்புதல்” திட்டம் 2025-இல் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது ஷம்சுல் இதனைக் கூறினார்.

கடந்த ஜனவரி 26-ஆம் தேதியன்று, பிகேஆர் பொதுச் செயலாளர் டாக்டர் புசியா சாலே, 2025-2028 தவணைக்கான மத்திய செயற்குழு, மகளிர் மத்திய செயற்குழு மற்றும் பிகேஆர் இளைஞர் மத்திய செயற்குழுவிற்கான கட்சித் தேர்தல்கள் மே 24 அன்று நடைபெறும் என அறிவித்தார்.

பிகேஆர் கட்சித் தேர்தல்களுக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. பிகேஆர் கட்சியின் தலைவருக்கான தவணைக்காலம் 3 தவணைகள் மட்டுமே இருக்க வேண்டுமென பிகேஆர் கட்சியின் சட்டவிதிகள் தெரிவிக்கின்றன. அன்வார் எதிர்வரும் மே மாதத் தேர்தலில் போட்டியிட்டால் இதுவே அவருக்கான 3-வது இறுதித் தவணையாக இருக்கும்.