புதுடில்லி: கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி யூனியன் பிரதேசத்திற்கான சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 8) காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக 42 தொகுதிகளில் முன்னணி வகிப்பதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் பாஜக மீண்டும் டில்லியைக் கைப்பற்றும் எனத் தெரிவித்தன. அதன்படி மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 42 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது. ஆம் ஆத்மி கட்சி 26 தொகுதிகளில் மட்டுமே முன்னணி வகிக்கிறது.
டெல்லி சட்டமன்றத்திற்கான மொத்த இடங்கள் 70 என்பதால் ஆட்சி அமைக்க 36 இடங்களே போதுமானது.
ஆம் ஆத்மி கட்சியைக் கட்டமைத்த அரவிந்த் கெஜ்ரிவால் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அதைத் தொடர்ந்து அவர் பதவி விலகியது, அவருக்குப் பதிலாக அதிஷி மார்லினா முதலமைச்சராகப் பதவியேற்றது – போன்ற அம்சங்கள் அந்தக் கட்சியின் வெற்றிக்குப் பின்னடைவைக் கொண்டு வரலாம்.
இறுதி நிலவரப்படி, பாஜக பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தால் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் டில்லியைக் கைப்பற்றி மீண்டும் அங்கு ஆட்சியமைக்கும் சாதனையை நிகழ்த்தும்.