

கோலாலம்பூர்- அண்மையில் இந்திய அரசாங்கத்தின் ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன – நூற்றுக்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என இந்திய அரசாங்கம் அறிவித்தது.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் அண்டை நாடுகளுக்கும் நட்பு நாடுகளுக்கும் விளக்கம் அளிக்க இந்திய நாடாளுமன்றம் பல குழுக்களை நியமித்து அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பல வட்டாரங்களுக்கு அனுப்பியிருக்கிறது.
மேலும் தனிப்பட்ட முறையிலும் சில குழுக்களைச் சந்தித்து இந்த நாடாளுமன்ற குழு விளக்கங்களை வழங்கி உள்ளது. இந்த விளக்கங்களை வழங்க கோலாலம்பூருக்கு வருகை தந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் கீழ்க்காண்போர் இடம் பெற்றனர்:
- சஞ்சய் குமார் ஜா (குழுத் தலைவர்) – ஐக்கிய ஜனதா தளம்
- ஶ்ரீமதி அபராஜிதா சாரங்கி – பாஜக
- ஶ்ரீ அபிஷேக் பானர்ஜி – அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்
- ஶ்ரீ பிரிஜ் லால் – பாஜக
- ஜான் பிரிட்டாஸ் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
- ஶ்ரீ பிரதான் பாருவா – பாஜக
- டாக்டர் ஹேமாங் ஜோஷி – பாஜக
- சல்மான் குர்ஷிட் – உயர்நிலை வழக்கறிஞர்; முன்னாள் வெளியுறவு அமைச்சர்
- மோகன் குமார் – பிரான்சுக்கான முன்னாள் இந்தியத் தூதர்
பத்திரிக்கையாளர்களுக்கான விளக்கங்கள் முடிந்தவுடன் இன்று திங்கட்கிழமை (ஜூன் 2) தொடங்கி மலேசிய அரசாங்கத்தின் அதிகாரிகளையும் தாங்கள் சந்தித்து விளக்கங்கள் வழங்க இருப்பதாக நேற்றைய சந்திப்பு கூட்டத்திற்கான ஏற்பாட்டை செய்த மலேசியாவுக்கான இந்திய தூதர் பிஎன் ரெட்டி தெரிவித்தார்.
காஷ்மீர் பகல்காம் தாக்குதல்
இதனைக் கண்டு பொறுக்காத பயங்கரவாதிகள் அங்கு அமைதியை சீர்குலைக்க மேற்கொள்ளப்பட்ட பகல்காம் தாக்குதலில் மத அடிப்படையில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து எல்லை கடந்த பயங்கரவாதத்தினால் நடத்தப்பட்ட இந்த செயலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம், பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலில் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையில் பொதுமக்கள் யாரும் தாக்கப்படவில்லை. மாறாக பயங்கரவாத முகாம்கள், பயங்கரவாதிகள் தங்கி இருந்த இடங்கள் ஆகியவை குறி வைத்து துல்லியமாக தாக்கப்பட்டன.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரும் பாகிஸ்தான் அரசாங்கம்
பயங்கரவாத செயல்களை பாகிஸ்தான் அரசாங்கத்தினர் பகிரங்கமாக ஆதரிக்கின்றனர் என குற்றம் சாட்டிய இந்திய நாடாளுமன்றக் குழுவினர், அதற்கான ஆதாரங்களையும் புகைப்படங்களையும் காட்டினர். உதாரணமாக கொல்லப்பட்ட பயங்கரவாத கும்பலின் இறுதிச்சடங்கில் பாகிஸ்தானின் உயர்நிலை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்ட புகைப்படங்களையும் நாடாளுமன்ற விளக்கக் குழு பத்திரிகையாளர்களுக்குக் காட்டியது.
மலேசியா-அண்டை நாடுகளுக்கும் பாதிப்பு ஏற்படலாம்
பாகிஸ்தானின் பயங்கரவாத ஊக்குவிப்பை எல்லா நாடுகளும் கண்டிக்க வேண்டும், எதிர்க்க வேண்டும். காரணம், இந்த பயங்கரவாதத்தினால் மற்ற நாடுகளும் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
உதாரணத்திற்கு 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலில் ஒரு மலேசியப் பெண்மணி கொல்லப்பட்டார் என்பதை புகைப்படத்துடன் நாடாளுமன்ற விளக்கக் குழுவின் சார்பில் பேசிய திருமதி அபராஜிதா சுட்டிக் கட்டினார்.
அதுமட்டுமின்றி அண்மைய காலங்களில் காஷ்மீர் போன்ற சுற்றுலா தளங்களுக்கு அதிக அளவில் மலேசியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் வருகை தரத் தொடங்கியுள்ளனர் .
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் மற்றொரு ஆதாரம் ஒசாமா பின்லேடன் அந்நாட்டிலேயே நீண்ட காலம் தங்கி இருந்தார் என்பதும் அமெரிக்கா ராணுவம் ஒசாமா பின் லாடனை பாகிஸ்தான் மண்ணிலேயே தாக்கிக் கொன்ற சம்பவமுமாகும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக் காட்டினார்.
விளக்கக் கூட்டத்தின் இறுதியில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்களுக்கு மதிய உணவு விருந்துபசரிப்பும் நடத்தப்பட்டது.