

சிலாங்கூர், பூச்சோங் வட்டாரத்தில் பல்லாண்டுகளாக இயங்கி வரும் சுத்த சமாஜம் அமைப்பு தனித்து விடப்பட்ட தாய்மார்களுக்கும், ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கும் புகலிடமாக, அரவணைக்கும் காப்பகமாக விளங்கி வருகிறது.
ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே இனம் என்ற தாரக மந்திரத்தைக் கொள்கையாகக் கொண்ட பூச்சோங் சுத்த சமாஜம் 1948-ஆம் ஆண்டில் சுவாமி சத்தியானந்தா அவர்களால் தொடங்கப்பட்டதாகும். அவருக்குப் பின்னர் அன்னை மங்களம் இந்த அமைப்பைத் திறம்பட நடத்தி விரிவாக்கம் செய்தார்.
தனித்து வாழும் தாய்மார்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கும் பல அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் ஆங்காங்கே உதவிகள் வழங்கி வந்தாலும், அத்தகைய உதவிகளை ஒரே குடையின் கீழ், ஒரே இடத்தில் வழங்கும் மையமாக பூச்சோங் சுத்த சமாஜம் செயல்பட்டு வருகிறது.


மலேசியர்களின் பல இன கலாச்சார அம்சங்களைப் போற்றும் வண்ணம், பிரதிபலிக்கும் வண்ணம் ‘மாலாம் முஹிபா’ என்ற நிகழ்ச்சியை கடந்த ஆண்டுகளில் பூச்சோங் சுத்த சமாஜம் கொண்டாடி வந்துள்ளது.
எனினும் 2018-ஆம் ஆண்டில் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை மீண்டும் இந்த ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி பூச்சோங் சுத்த சமாஜம் தனது வளாகத்திலேயே நடத்தியது.
பொதுநலப் பிரமுகர் டான்ஸ்ரீ லீ லாம் தை, உள்ளிட்ட சமூகத் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.