
புத்ரா ஜெயா: இதுவரை கடந்த காலத்தில் இல்லாத அளவுக்கு நாட்டின் தலைமை நீதிபதியும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற பிறகும், இன்னும் அந்தப் பதவிகளுக்கு யாரையும் பிரதமர் நியமிக்காமல் இருப்பது ஊடகங்களில் சர்ச்சைக்குரிய விவாதமாக உருவெடுத்துள்ளது.
மலாயாவுக்கான தலைமை நீதிபதி டான்ஸ்ரீ ஹாஸ்னா ஹாஷிம் இடைக்காலத் தலைமை நீதிபதியாக செயல்படுவார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாஸ் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹாசான் இது குறித்துக் கருத்துரைக்கையில், ஹாஸ்னா ஹாஷிம் தலைமை நீதிபதியாகவும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகவும் இடைக்காலத்திற்கு ஒரே நேரத்தில் செயல்படுவது நாட்டில் இதுவரை காணாத வரலாற்று நடைமுறை என வர்ணித்தார்.
நேற்று ஜூலை 2-ஆம் தேதியுடன் தலைமை நீதிபதி தெங்கு மைமுன், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் அபாங் இஸ்கண்டார் ஆகிய இருவரும் பணி ஓய்வு பெற்றனர்.
2019-இல் நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார் தெங்கு மைமுன் துவான் மாட். ரிச்சர்ட் மலாஞ்சுனுக்கு அடுத்து அவர் அந்தப் பதவியை ஏற்றார். நடுநிலையாகவும், அரசாங்க சார்பின்றியும் நீதியை நிலைநாட்டுவதில் அவர் சிறப்புடன் செயல்பட்டார் என பல வழக்கறிஞர்கள் அவரைப் பாராட்டியுள்ளனர். எனினும் அவரை தலைமை நீதிபதியாக நீடிக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், நாட்டின் நீதித் துறையின் சுதந்திரத்தை நிலைநாட்டும் பொறுப்பு இனி அரசாங்கத்தையும், தனக்குப் பதிலாக நியமிக்கப்படவிருக்கும் புதிய தலைமை நீதிபதியையும் சார்ந்தது என தெங்கு மைமுன் கூறியுள்ளார்.