Home 13வது பொதுத் தேர்தல் “சுல்கிப்ளிக்கு தொகுதி கொடுத்ததும் நான் சுயேச்சையாக நிற்பதற்கு ஒரு காரணம்” – உலு சிலாங்கூர் வேட்பாளர்...

“சுல்கிப்ளிக்கு தொகுதி கொடுத்ததும் நான் சுயேச்சையாக நிற்பதற்கு ஒரு காரணம்” – உலு சிலாங்கூர் வேட்பாளர் எட்மண்ட் சந்தாரா

910
0
SHARE
Ad

Edmund-Santhara-Slider--4உலு சிலாங்கூர், மே 3 –  “அரசாங்கத்தின் அணுகுமுறைகளில் மாறுதல்கள் நிகழும் எனப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து நானும் வெறுத்துப் போய்விட்டேன். இனி மாறுதல்களை அரசியல் ரீதியாக கொண்டுவர நாமே நேரடியாக களத்தில் இறங்க வேண்டியதுதான் என்று முடிவு செய்து முதல் கட்டமாக இப்போது உலு சிலாங்கூர் நாடாளுமன்றத்தில் சுயேச்சை வேட்பாளராக நிற்கின்றேன்” என்று கூறுகின்றார் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத்திற்கு சுயேச்சையாகப் போட்டியிடும் வர்த்தகப் பிரமுகர் டத்தோஸ்ரீ டாக்டர் எட்மண்ட் சந்தாரா.

#TamilSchoolmychoice

மலேசிய மண்ணிற்கே உரித்தான இன, மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வண்ணம் பேசிய சுல்கிப்ளி நோர்டினை கண்டிக்காமல், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அம்னோவிற்கு வெளியில் இருந்து அவரை கொண்டு வந்து நாடாளுமன்ற தொகுதி கொடுத்ததும் நான் சுயேச்சையாகப் போட்டியிடுவதற்கு ஒரு காரணம்” என்று செல்லியல் இணையத் தளத்திற்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியின்போது சற்று காட்டமாகவே கூறினார் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா.

திடீர் அரசியல் பிரவேசம்?

மிக இளம் வயதிலேயே வணிகத் துறையில் உச்சத்தைத் தொட்டவர் எட்மண்ட் சந்தாரா. மாஸ்டர் ஸ்கில் என்ற கல்வி நிறுவனத்தை நிறுவி அதனை பொதுப் பங்கு நிறுவனமாக மாற்றி குறுகிய காலத்தில் வணிகத் துறையில் முத்திரை பதித்தவர் எட்மண்ட் சந்தாரா.

இந்த 13வது பொதுத் தேர்தலில் அவர்தான் சுயேச்சை வேட்பாளர்களில் நாட்டிலேயே அனைவரின் கவனத்தையும், அனைத்து தகவல் ஊடகங்களின் கவனத்தையும் ஒருங்கே ஈர்த்தவர் என்றால் அது மிகையாகாது.

ஆங்கில, மலாய்ப் பத்திரிக்கைகள் கூட பிரச்சாரத்தில் நிற்கும் அவரைத் தேடிப் பிடித்து அவரது 13வது பொதுத் தேர்தல் அரசியல் பிரவேசம் குறித்த கருத்துக்களை பிரசுரித்து வருகின்றன.

காரணம், ஒரு பெரிய பொதுப் பங்கு நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி என்ற கைநிறைய சம்பாதிக்கும் பதவியை ராஜினாமா செய்து விட்டு, எந்த பெரிய அரசியல் கட்சிகளையும் சாராமல் சுயேச்சையாகப் போட்டியிட முன்வந்திருக்கும் அவரது வித்தியாசமான அணுகுமுறைதான் அவரைப் பேட்டியெடுக்கத் துடிக்கும் தகவல் ஊடகங்களின் ஆர்வத்திற்குக் காரணம்.

இடைத் தேர்தலில் உலு சிலாங்கூர் தொகுதியைக் கடும் போராட்டத்தில் கைப்பற்றிய தேசிய முன்னணி வேட்பாளர் கமலநாதன் மீண்டும் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியை சுலபமாக தக்க வைத்துக் கொள்வார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில்,எதிர்பாராத அதிர்ச்சியாக எட்மண்ட் சந்தாராவும் உலு சிலாங்கூர் தேர்தல் களத்தில் குதித்திருக்கின்றார்.

இதனால், தேசிய முன்னணி வேட்பாளர் கமலநாதன் தோல்வியடைவது நிச்சயம் என்ற சூழ்நிலை உலு சிலாங்கூரில் உருவாகியுள்ளது.

காரணம், தீவிரப் பிரச்சாரம், அவரோடு சேர்ந்துள்ள உள்ளூர் வாக்காளர்களின் ஆதரவு, ஒரு வர்த்தக நிறுவனத்தை நிர்வகிக்கும் வகையில் நன்கு திட்டமிடப்பட்ட வியூகங்கள் என எட்மண்ட் சந்தாரா பன்முனைகளிலும் வித்தியாசப்பட்ட அணுகுமுறையோடு உலு சிலாங்கூரில் களமிறங்கியுள்ளது மற்ற வேட்பாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

எளிமையான அணுகுமுறை

பொதுச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு பெரிய கல்வி நிறுவனத்தின் தலைமைச் செயல் முறை அதிகாரி என்பதால் அவரது பிரச்சார யுக்திகள் ஆடம்பரமாகவும், ஆர்ப்பாட்டமாகவும் இருக்கும் என்று பார்த்தால், நாம் நினைத்ததற்கு நேர் எதிர் மாறாக  எளிமையான சூழ்நிலையில் அவரது பிரச்சாரம் அமைந்திருந்தது.

செல்லியலுக்காக நேரடி பிரத்தியேகப் பேட்டிக்காக அவரை அணுகியபோது அரைக்கை சட்டையோடு கூடிய எளிமையான  உடையில் உலுயாம் பாருவில் உள்ள ஒரு சாதாரண சீனர் காப்பிக் கடையில் வந்து அமர்ந்தார்.

அந்த இடத்திலிருந்து சில கட்டிடங்கள் தள்ளித்தான் அவரது தேர்தல் மைய அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

செல்லியலுக்காக நடத்தப்பட்ட இந்த சந்திப்பின் போது நாம் எழுப்பிய சில கேள்விகளுக்கு எட்மண்ட் சந்தாரா அளித்த பதில்கள் பின்வருமாறு:-

ஏன் இந்த அரசியல் பிரவேசம்?

பதில்: நான் வர்த்தகத்தில் உயர்ந்தேன் என்பது உண்மைதான். ஆனால், அரசாங்கத்தின் அணுகுமுறைகள் மாறும், மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்த்து நீண்டகாலமாக காத்திருந்தேன். அப்படி எதுவும் நிகழவில்லை என்னும் போது வெறுத்துப் போய் நானே நேரடியாக அரசியல் களத்தில் இறங்கி மாற்றங்களைக் கொண்டு வருவோம் என்ற முயற்சிகளில் இறங்கியுள்ளேன்.

கட்சியில் சேராமல் ஏன் சுயேச்சை வேட்பாளராகப் போட்டி?

பதில்: நான் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்தால் அந்த கட்சியின் கொள்கைகளைப் பற்றித்தான் பேச முடியும். எனது சொந்த கருத்துக்களை சுயமாக வெளியிட முடியாது.

நான் சேருகின்ற கட்சியின் கொள்கைகள் எனது கொள்கைகளுக்கு எதிராக இருந்தாலும் நான் எதுவும் பேச முடியாது.

அதனால்தான் எனது சொந்த கருத்துக்களையும், திட்டங்களையும் வெளியிடும் நோக்கில்தான் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்தேன்.

உலுசிலாங்கூரைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

பதில்: இங்கு எனக்கு நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் என பலர் இருக்கின்றார்கள். அவர்களின் ஆதரவு ஒரு காரணம்.

உலு சிலாங்கூர் புறநகர் பகுதி. இங்கு பலதரப்பட்ட மக்களின் பிரச்சனைகள் இருக்கின்றன. அரசியலில் எனது புதிய அம்சங்களையும், அணுகுமுறைகளையும் புகுத்துவதற்கும், பரிட்சித்துப் பார்ப்பதற்கும் பொருத்தமான களமாக இருக்கும் என்ற நோக்கத்தோடுதான் இங்கே போட்டியிடுகின்றேன்.