Home நாடு சுக்மா சர்ச்சை – விளையாட்டாளர்களோடு சேர்ந்து பயிற்சியாளர்களும் மது அருந்தியது குறித்து கைரி அதிருப்தி

சுக்மா சர்ச்சை – விளையாட்டாளர்களோடு சேர்ந்து பயிற்சியாளர்களும் மது அருந்தியது குறித்து கைரி அதிருப்தி

608
0
SHARE
Ad

khairy-jamaluddinகோலாலம்பூர், ஜூலை 9 – 2013 ஆம் ஆண்டிற்கான சுக்மா விளையாட்டுப் போட்டியில், பெண் விளையாட்டாளர் ஒருவர் கற்பழிப்பு, பயிற்சியாளர்கள் மது அருந்தியது போன்ற சர்ச்சைள் ஏற்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்த இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன், சம்பந்தப்பட்டவர்களை விளையாட்டிலிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து கைரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கற்பழிப்பு புகார் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் பலரிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கூறியுள்ளோம். இது எதனால் ஏற்பட்டது? எந்த அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன? போன்றவை நமக்குத் தெரிய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

“விளையாட்டாளர்கள் தங்கும் இடத்தில், பயிற்சியாளர்கள் மது அருந்திக் கொண்டாடியது குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியுற்றேன். விளையாட்டு வீரர்களை வழி நடத்திச் செல்வது  அணி பொறுப்பாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் கடமையாகும். ஆனால் அவர்களும் ஒழுக்கமின்றி இப்படி நடந்து கொண்டதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என்று கைரி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு அதிகாரிகளை, விசாரணை முடியும் வரை தற்காலிக இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் கைரி தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் மற்ற விளையாட்டாளர்களை பாதிக்கக்கூடாது

கடந்த ஞாயிற்றுக்கிழமை, 19 வயதுடைய பெண் கைப்பந்து விளையாட்டாளர் ஒருவர், தான் கடந்த ஜூலை 3 ஆம் தேதி, புத்ரா பல்கலைக்கழகத்திலுள்ள விளையாட்டாளர்கள் தங்கும் அறையில் வைத்து, சக விளையாட்டாளர்களால் கற்பழிக்கப்பட்டதாக புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆனால், அச்சம்பவம் நடைபெறுவதற்கு முன், அப்பெண் தன் சக விளையாட்டாளர்களோடு மது அருந்த வெளியே சென்றதாகத் தெரியவந்திருக்கிறது.

“சுக்மா விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் வந்துள்ளனர். எனவே இவ்விவகாரத்தை முன்வைத்து, சுக்மாவில் கலந்து கொள்ளும் அனைவரும் ஒழுக்கமில்லாதவர்கள் என்று எண்ணம் தோன்றிவிடக்கூடாது. இந்த சம்பவத்திற்கு போதிய பாதுகாப்பின்மையும் ஒரு காரணம். எனவே இவ்விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறு டத்தோஸ்ரீ ஸோல்க்பிளஸ் எம்போங்கை (தேசிய விளையாட்டு வாரியத்தின் பொது செயலாளர்) கேட்டுக்கொள்கிறேன்” என்று கைரி தெரிவித்துள்ளார்.