வாஷிங்டன், ஜூலை 11- சிறுவயதில் ஏற்படும் உடற்பருமனை குறித்த விழிப்புணர்ச்சிப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடத்தப்பட்ட மதிய உணவிற்கான ஆரோக்கியமான சமையல் என்ற தலைப்பில், சிறுவயதினருக்கான ஒரு சமையல் குறிப்பு போட்டி நடத்தப்பட்டது.
இதில் அமெரிக்க வாழ் இந்தியப்பெண்ணான எம்மாவின் சமையல் குறிப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிக்கன் ராப் என்ற இவளது குறிப்பு 54 தேர்வுகளில் ஒன்றாக அமைந்தது. இதன்மூலம் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரும், அவரது மனைவியும் அளித்த சிறுவர்கள் விருந்திற்கு எம்மாவும் அழைக்கப்பட்டாள்.
10 வயதான எம்மாவும், அவளது தாயார் ஆஷா சீல்சொவும் அதிபரின் விருந்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் அதிபரையும், அவரது மனைவி மிச்சேலையும் சந்தித்துப் பேசினர்.அப்போது உணவு பற்றி கேட்டபோது, ஒபாமா மசாலாப் பொருட்கள் பிடிக்கும் என்றும், அவரது மனைவி இந்திய சமையல் பிடிக்கும் என்றும் கூறியதாகத் தெரிவித்தார்கள்.வாஷிங்டனில் உள்ள ரசிகா என்ற இந்திய உணவகம் தனக்குப் பிடித்தமானது என்று மிச்சேல் குறிப்பிட்டதாகக் கூறிய சீல்சொ, தனக்கும் அங்குள்ள உணவு வகைகள் பிடித்தமானவை என்று கூறினார்.
பின்னர், சிறுவர், சிறுமியர்களிடம் பேசியபோது ஒபாமா சிறுவயதில் காய்கறிகளை வேகவைத்து உண்ட பழக்கத்தைப் பகிர்ந்துகொண்டார். அதுபோல் நேரம் கிடைக்கும்போது சமையல் குறிப்பைப் பின்பற்றி சமைப்பேன் என்று தன்னைப் பற்றி கூறிக்கொண்டார். சிறுவயதில் இவ்வளவு அற்புதமாக செய்திருக்கும் அவர்களின் உணவுப் பண்டங்கள் ஆரோக்கியமான ஒன்றாகவும் இருக்கவேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சி இரண்டாவது ஆண்டாகத் தொடர்ந்து நடைபெறுகின்றது. 8 முதல் 12 வயதுக்குட்பட்டவர்களை, பெரியவர்களின் துணையுடன் சுவையான, சத்தான, ஆரோக்கியமான, எளிமையான சமையல் குறிப்பொன்றை செய்யச்சொல்லி பரிசளிக்கும் இந்த நிகழ்ச்சியை வெள்ளை மாளிகை நடத்தி வருகின்றது.