கோலாலம்பூர், ஜூலை 23 – தற்போது ரம்லான் மாதம் என்பதால், சுங்கப் பூலோவில் ஒரு பள்ளியில் இஸ்லாம் அல்லாத மாணவர்களை குளியல் அறைக்கு அருகில் மேசை போட்டு, அங்கு உணவருந்த செய்த புகைப்படங்கள் தற்போது முகநூலில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
சுங்கை பூலோவில் உள்ள எஸ்.கே ஸ்ரீ பிரிஸ்டினா என்ற பள்ளியில் இஸ்லாம் அல்லாத மாணவர்களுக்கு கழிவறைக்கு அருகில் தற்காலிக மேசை அமைத்து, அங்கு மாணவர்களை உணவருந்த வைத்துள்ளனர்.
அதே நேரத்தில், பள்ளியில் உள்ள சிற்றுண்டி சாலையில் ரம்லான் நோன்பு காரணமாக இம்மாதம் முழுவதும் உணவு வழங்குவதை நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், துணைக்கல்வி அமைச்சரான (II) பி.கமலநாதன் தனது டிவிட்டர் வலைத்தளத்தில், சம்பந்தப்பட்ட பள்ளியில் உள்ள தற்காலிக உணவருந்தும் இடத்தை அகற்றும் படி கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.