கோலாலம்பூர்,ஆகஸ்ட் 28 – நாட்டிலுள்ள எல்லா திரையரங்குகளிலும் நாளை முதல் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் என்றும், அதற்கு மரியாதை செலுத்தத் தவறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இதற்கு உள்துறை அமைச்சகம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
இது குறித்து உள்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜூனாய்டி கூறுகையில், கட்டாயப்படுத்தி யாரிடமிருந்தும் நாட்டுப்பற்றை கொண்டு வருவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மலேசியா வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தனது 56 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு ஆங்காங்கே தேசியக் கொடிகளைப் பறக்க விடும்படி தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆனால் இந்த கோரிக்கையைப் பலர் ஏற்றுக்கொள்வதாகத் தெரியவில்லை. இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 3 ஆம் தேதி வரை அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்ய வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படுவதற்கு முன்பாக தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்றும், அப்போது அரங்கில் இருக்கும் ரசிகர்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு மரியாதை செலுத்தத் தவறியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு குறைந்தது 100 வெள்ளி அபராதம் அல்லது ஒரு மாத சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் 1968 ஆம் ஆண்டு தேசிய கீதச் சட்டம் வகை செய்திறது என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சகம் தெரிவித்துள்ளது.