Home கலை உலகம் ‘மெல்லத் திறந்தது கதவு’ – கார்த்திக் ஷாமலனுடன் ஒரு நேர்காணல்

‘மெல்லத் திறந்தது கதவு’ – கார்த்திக் ஷாமலனுடன் ஒரு நேர்காணல்

1259
0
SHARE
Ad

971145_498065420248552_1319065116_nஆகஸ்ட் 31 – தெளிவாகப் பேசுகிறார் இயக்குநர் கார்த்திக் ஷாமலன்  .. இன்றைய காலத்தில் திரைப்படம் இயக்கும் கனவோடு வரும் இளைஞர்களுக்கு கார்த்திக் ஒரு முன் உதாரணம் என்று தான் சொல்ல வேண்டும்.

காரணம் ஒரு இயக்குநராக மட்டும் இல்லாமல், தான் இயக்கிய படத்திற்கு தேவையான தொழில்நுட்ப நுணுக்கங்களில் தொடங்கி, வியாபார யுத்திகள் வரை அத்தனையையும் தெரிந்து வைத்திருக்கிறார்.

படத்தை என்னதான் அழகாக, வித்தியாசமான வகையில் எடுத்திருந்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தான் அந்த திரைப்படத்தின் வெற்றி இருக்கிறது.

#TamilSchoolmychoice

அது தான் இன்றைய காலத்தில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அந்த வகையில் கார்த்திக் ஷாமலனின் திட்டங்கள் வியக்க வைக்கின்றன. தன் படத்தின் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கையும், உறுதியும் மலேசிய திரையுலகின் மீது பெரும் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சுகிறது.

பேராக் மாநிலம் தைப்பிங்கில் பிறந்தவரான கார்த்திக், இதற்கு முன் பல குறும்படங்களை இயக்கியவர். அதில் ‘முதல் நாள் இன்று’, ‘எஸ்ஆர்கே’, IN A SCENT போன்ற குறும்படங்கள் பெறும் வரவேற்பை பெற்றவை.

குறிப்பாக  ‘எஸ்ஆர்கே’  என்ற குறும்படத்தில் நடித்த பெண் கதாப்பாத்திரம் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற BMW shorties போட்டியில் சிறந்த நடிகை விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.

தற்போது ‘மெல்லத் திறந்தது கதவு’ என்ற முழு நீளப் படத்தை இயக்கி அதை வெளியிடக் காத்திருக்கிறார். தற்போது முகநூலில் வெளியிடப்பட்டிருக்கும்  படத்தின் டீஸருக்கே லைக்ஸ் அள்ளுகிறது.

இதோ கார்த்திக் ஷாமலுடன் பேசிய கலந்துரையாடல்…

செல்லியல்: மெல்லத் திறந்தது கதவு எந்த மாதிரி ரசிகர்களுக்கான படம்?

கார்த்திக்: அடிப்படையில் இது அடல்ஸ்(Adults) பார்க்க வேண்டிய ஒரு படம். இந்தப் படத்தை பார்த்துட்டு எத்தனை அம்மா, அப்பா கோபப்படப் போறாங்கன்னு தெரியலை. ஏன்னா இந்த படத்தில் இன்றைய இளம் தலைமுறையினரின் வாழ்வியலையும், எதார்த்தங்களையும் எந்த ஒரு ஒளிவு மறைவுமின்றி காட்டியிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நம் பெரியவர்களைப் பற்றியும், குழந்தைகளைப் பற்றியும் ஆஸ்ட்ரோ, ஆர்டிஎம் போன்ற உள்ளூர் தொலைக்காட்சிகள் நிறைய நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. ஆனால் இதற்கிடையே உள்ள இளம் தலைமுறையினரைப் பற்றிய கதைகளையும், அவர்களது வாழ்க்கையையும் எங்கு தேடுவது? அப்படி ஒரு தேடலில் கிடைத்தது தான் ‘மெல்லத் திறந்தது கதவு’ படத்தின் கதை. இளம் தலைமுறையினருக்கு இந்த படம் கட்டாயம் பிடிக்கும். அதற்காக இது ஒரு சின்னப் பசங்களுக்கான படம் என்று நினைக்க வேண்டாம்… இதில் சமூகப் பொறுப்புணர்வும் இருக்கிறது. அதையும் தாண்டி ஒரு கதையும் இருக்கிறது.

1236669_539082702813490_2012733372_nசெல்லியல்: தெளிவான சிந்தனை கார்த்திக்… படத்தில் நடித்த கதாப்பாத்திரங்கள் பற்றி?

கார்த்திக்: ஆரம்பத்துல சில கதாப்பாத்திரங்கள் மாறிக்கிட்டே இருந்தது. ஆனால் இந்த படத்தோட கதாநாயகன் பாத்தீங்கன்னா ஒரு போர்ச்சுகீசிய தமிழராக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். நமது நாட்டில் ஆங்கிலோ இந்தியன் என்று அழைக்கக்கூடிய போர்ச்சுகீசிய தமிழர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை நிறைய பேருக்கு தெரியாது. அவர்கள் தமிழை திணறி திணறி பேசுவாங்க. ஆனால் தமிழை படிக்க வேண்டும் என்று ஆர்வம் அவங்களுக்கு அதிகமாக இருக்கும்.

அப்படி தமிழின் மீது ஆர்வம் இருக்கிற ஒரு பையன் தான் என் படத்தின் கதாநாயகன். அவன் பேசுற தமிழ் கொஞ்சம் சிரிப்பாக இருக்கும். நல்லா தமிழ் பேசுற ஒரு கதாநாயகி. சபா மாநிலத்தில் இருந்து இங்கே சிட்டிக்கு வருகிறாள். அவளுக்கு இங்க இருக்கிற கலாச்சார மாற்றங்களை பார்த்து ஏற்படுற அதிர்ச்சி இத சுத்தி தான் கதை இருக்கும்.

படத்துக்கு கதாநாயகன் முன்னாடியே கிடச்சுட்டாரு.. ஆனால் கதாநாயகியை முகநூல் மூலமா தேர்ந்தெடுக்கலாம் என்று நினைத்தோம். அதில் 55 பேர் ஆர்வம் காட்டியிருந்தாங்க.. இறுதியா ஜாய் ரசன் கிடைச்சாங்க.

எங்களை மாதிரி அறிமுக இயக்குநர்களிடம் நடிக்க வர நடிகர், நடிகைகள் அவங்களோட சம்பள விஷயத்துல கொஞ்சம் விட்டுக் கொடுக்கனும். ஏன்னா நாங்க அவங்க கேட்குற சம்பளத்தை தரமாட்டோம்ன்னு சொல்லல. இல்லைன்னு தான் சொல்றோம். அந்த வகையில் எனக்கு கிடைச்ச நடிகர்கள் சம்பள விஷயத்துல எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தாங்க..

செல்லியல்: எப்படி தொடங்கியது உங்களோட சினிமா வாழ்க்கை?

கார்த்திக்: நான் சினிமாவுக்குன்னு தனியா படிப்பெல்லாம் போய் படிக்கல.. சினிமா மீது சின்ன வயசுல இருந்தே ஆர்வம் இருந்தது. முதல்ல திரைக்கதை எழுதக் கத்துக்கிட்டேன். அப்புறம் ஒரு திரைக்கதை எழுதி ‘கார்த்திக் ஷாமலன்’ என்ற பேர்ல ஒரு குறும்படம் எடுத்தேன். அதற்கு நிறைய பேர் ஆதரவு கொடுத்தாங்க. அந்த நம்பிக்கையில இன்னொரு திரைக்கதை எழுதி நிறைய தயாரிப்பாளர் (நிறைய என்று அழுத்திச் சொல்கிறார்) கிட்ட காட்டினேன். ஆனா அவங்க நீ புதுமுகம் இதற்கு முன்னாடி என்ன பண்ணியிருக்க அப்படின்னு கேட்டாங்க.

நல்ல கதையப் பார்க்கல.. நான் படம் எடுத்திருந்த சாதாரண கேமெராவத்தான் எல்லாரும் குறை சொன்னாங்க. அப்ப எனக்கு ரொம்ப கோபம் வந்தது. நல்ல கதையையும், திரைக்கதையையும் கையில் வைத்திருந்தேன் ஆனா அதை தயாரிக்க யாரும் முன்வரவில்லை.

சரி… நாமே கேமெரா வாங்கி நல்ல படங்கள் பன்னுவோம்னு நினைச்சு ..வங்கியில கடன் எடுத்து கேமெரா, லைட்டிங்க்ஸ் எல்லாம் வாங்கி ‘முதல் நாள் இன்று’ என்ற பெயருல குறும்படம் ஒன்னு எடுத்தேன்.

அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தியாவில் ஒன் டேக் என்ற நிறுவனம் அதை தாங்களே ஆன்லயனில் வெளியிடுவதாகக் கூறி வாங்கிக் கொண்டார்கள்.

அதன் பிறகு எஸ்ஆர்கே, IN A SCENT போன்ற படங்கள் மக்களால் பெரிதும் ரசிக்கப் பட்டன. ‘சாத்தான்’ னு ஒரு குறும்படம் எடுக்க முயற்சி பண்ணேன் ஆனால் ரசிகர்கள் அதற்குக் கொடுத்த ஆதரவைப் பார்த்திட்டு அதை முழு நீளப் படமா எடுக்கலாம்னு நிறுத்திட்டேன். விரைவில் அந்த படம் வெளிவரும்.

மொத்தம் இதுவரை 7 குறும்படங்கள் எடுத்திருக்கேன்.. எல்லாம்  ‘யூ டியூப்’ ல நல்ல வரவேற்பு கிடைத்தது.

செல்லியல்: படத்துல பாடல்கள் மிக அழக்காக வந்திருக்கிறதே?

கார்த்திக்: ஆமா… பாடல்கள் ரொம்ப அருமையா வந்திருக்கிறது. இசையமைப்பாளர் சமேஷ் மணிமாறன் மற்றும் படத்தில் பாடல்கள் எழுதிய யுவாஜி, ஓவியாவுக்குத் தான் நன்றி சொல்லனும்.

‘அடைமழை’ பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு யுவாஜியிடம் சொல்லி பாடல் வரிகள் எழுதச் சொல்லிவிட்டேன். காட்சிகளை அவரிடம் போட்டுக்காட்டவில்லை. ஆனால் அவராகவே அந்த பாடலை கற்பனை செய்து அழகான வரிகளை எழுதிக் கொடுத்துவிட்டார். நாங்கள் எடுத்த பாடல் காட்சிகளுக்கும்,அவர் எழுதிய பாடல் வரிகளுக்கும் மிகச் சரியாகப் பொருந்தியிருந்தது.

அதே நேரத்தில், ‘பேய்கள் மண்ணில் பிறக்கும் போது’ என்ற பாடல் ஒரு ராப் இசை கலந்த பாடல். ஓவியா அதற்கு சுத்த தமிழில் அழகான வரிகளை கொடுத்திருந்தார்கள்.

படத்தில் பாடல்கள் அமைந்த வகையில் எனக்கு முழு திருப்தி இருக்கிறது.

செல்லியல்: வாழ்த்துகள் கார்த்திக்… சரி  ‘மெல்லத் திறந்தது கதவு’ எப்ப திரைக்கு வருகிறது?1175072_535924006462693_728715752_n

கார்த்திக்: இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்போவதில்லை. டிவிடியாக மட்டுமே வெளியிடப்போறோம். (கேட்டதும் எனக்கு அதிர்ச்சி ..இவ்வளவு அழகான படத்தை திரையரங்கில் வெளியிடாமல் டிவிடியாக வெளியிடுவதன் காரணம் புரியாமல் தவித்தேன். அதற்கு கார்த்திக் கூறிய காரணம் யோசிக்க வைத்தது).

ப்ரோ நல்லா கேட்டுக்கோங்க… ஒரு குடும்பத்துல 6 பேர் இருக்காங்கன்னு வைங்க.. அவங்க 6 பேரும் தியேட்டருக்குப் போய் 60 வெள்ளி குடுத்து ஒரு படம் பாக்குறதுக்கும், அதே 6 பேர் 10 வெள்ளி குடுத்து ஒரு டிவிடி வாங்கி வீட்டிலேயே படம் பார்க்குறதுக்கும் வித்தியாசம் இருக்கு.

என்னோட படம் 10 வெள்ளிக்கான படம். மக்கள் குடுக்குற 10 வெள்ளிக்கேத்த மாதிரி இந்த படத்தில் எனது உழைப்பையும் நல்ல கதையையும் கொடுத்திருக்கேன். அதை அவங்க டிவிடி வாங்கி வீட்டுல இருந்தே பார்க்கலாம்.

ஆனால் 60 வெள்ளி குடுத்து தியேட்டர்ல பாக்குற படம் அப்படி இல்லை. அவங்க மனசுல அந்த படம் பற்றிய நினைவுகள் வீடு வந்து சேரும் வரையாவது இருக்க வேண்டும். அதே நேரத்தில் அவங்க குடுக்குற 60 வெள்ளிக்குத் தகுந்த மாதிரி படம் இருக்கனும். அப்படிப்பட்ட ஒரு நல்ல கதை எங்கிட்ட இருக்கு.. அதை விரைவில் படமாக்கி தியேட்டர்ல வெளியிடுவேன்.

(உண்மையில் யோசிக்க வேண்டிய ஒரு விஷயம் தான். ஒவ்வொரு இயக்குநரும் இது போல் மக்களின் ரசனைகளையும், உணர்வுகளையும் புரிந்து கொள்வதோடு, தனது படத்திற்கான விலையையும் மதிப்பீடு செய்வது நல்லது. அப்போது தான் மக்களின் நம்பிக்கையை கடைசி வரை காப்பாற்ற முடியும்)

செல்லியல்: உங்களின் வெளிப்படையான பேச்சு உங்களின் மீது இன்னும் மதிப்பை அதிகமாக்குகிறது கார்த்திக்… டிவிடி வெளியிடுறீங்க சரி… திருட்டுத் தனமா அதை இணையத்தில் வெளியிடுவதையும், பைரஸியையும் எப்படி சமாளிக்கப் போறீங்க? இவ்வளவு பணம் போட்டு படம் எடுத்திருக்கிறீங்க உங்க உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கனும்ல?

கார்த்திக்: சமாளிக்க முடியாது. இப்போ திருட்டு டிவிடி பத்தி கூட கவலை இல்லை. ஆனால் இணையத்தில் திருட்டுத்தனமா வெளியிடுறாங்களே அது தான் பிரச்சனை. மக்கள் 5 வெள்ளி குடுத்து திருட்டு டிவிடி கூட வாங்க மாட்றாங்க.

இன்னும் லாஜிக்கா சொன்னா… நம்முடைய மலேசியா படங்களை திருட்டு டிவிடி வாங்கும் அளவிற்கோ அல்லது இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் அளவிற்கோ மக்களுக்கு தேவை இருப்பதில்லை. அதனால நம்ம படங்களை மக்கள் இணையத்தில் தேடிப் பிடித்து பதிவிறக்கம் செய்தாங்கன்னாவே நாம் முன்னேறிட்டோம்னு அர்த்தம். அந்த மாதிரி படங்களை இயக்குனர்களான நாங்க விரைவில் கொடுப்போம்.

பைரஸில வர அளவிற்காவது நாம ஒரு படம் கொடுக்கனும் … என் படமே பைரஸில கிடைச்சுதுன்னா நான் சந்தோஷப் படுவேன். ஏன்னா இன்னைக்கு பைரஸிங்கிறது வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து நிக்கிற ஒரு விஷயம் அதை மாத்தனும்னு நான் நினைச்சேன்னா.. நான் தான் அதுல மூழ்கி சாவேன்… அதனால அதை மாத்த வேண்டாம்…நாம் புதுசா வேற ஏதாவது யோசிக்கலாம்.

படம் செப்டம்பர் ல ரிலீஸ் பண்ணுவேன்…ஆனா தேதி இப்போதைக்கு உறுதியா சொல்ல முடியல…படம் வேலைகள் எல்லாம் முடிஞ்சதும் முதல்ல என் படத்தை சில வெளியீட்டாளர்களுக்கு போட்டுக் காட்டுறேன்..என் படம் பார்த்துட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க.. அதுல ஏதாவது சில மாற்றங்கள் தேவைப்பட்டா மாத்திக்கிட்டு அப்புறம் வெளியிடுறேன்..

கண்டிப்பா இந்த படம் உங்களுக்கு பிடிக்கும் என்கிறார் ஆயிரம் கனவுகளோடு….

இப்படியாக கார்த்திக்குடன் பேசிய கலந்துரையாடல் அமைந்தது. இந்த இளம் வயதில் ஒரு இயக்குநர் என்பதையும் தாண்டி ஒரு அனுபவம் வாய்ந்த தொழிலதிபர் போல் அவர் பேசுவது ஆச்சர்யப் பட வைக்கிறது.

என்கிட்ட நல்ல கதை இருக்கு …எனக்கு யாருமே வாய்ப்பு கொடுக்க மாட்றாங்க… மலேசியா படங்களுக்கு யாரும் ஆதரவு கொடுக்க மாட்றாங்கன்னு புலம்பிக்கொண்டு இருக்கும் இளம் தலைமுறையினர்கள் கார்த்திக் வந்த பாதையை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இன்று உலக அளவில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி… நம்முடைய திறமையை நாமே நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.. முதலில் அதற்கான படிகளை நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும். யாரும் அடிமட்டம் வரை வந்து கை கொடுப்பார்கள் என்று காத்திருந்தால் …கடைசி வரை காத்துக் கொண்டே இருக்க வேண்டியது தான்…

விரைவில் மெல்லத் திறந்தது கதவு ரசிகர்களின் மனதையும், மலேசிய திரைப்படங்களின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கையையும் திறக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

– பீனிக்ஸ்தாசன்

மெல்லத் திறந்தது கதவு படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணைய வழித் தொடர்பு மூலம் காணலாம்