மலாக்கா, டிசம்பர் 2- மலேசிய இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் 300 கோடி வெள்ளியை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார் மஇகா தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல்.
நேற்று காலை மலாக்காவில் நடைப்பெற்ற மஇகா-வின் 67 வது தேசியப் பொதுப் பேரவையில் தலைமையுரையாற்றிய இயற்கை வளம் சுற்றுச் சுழல் அமைச்சருமான டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல் இக்கோரிக்கையை முன் வைத்தார்.
இதுவரை இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும், தமிழ்ப்பள்ளிகளுக்கும், ஆலயங்களுக்கும் கோடிக்கணக்கில் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் வழங்கியுள்ளார். அதுபோல் தொடர்ந்து இந்திய சமுதாயத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு பிரதமர் 300 கோடி வெள்ளியை வழங்க வேண்டும் என்றார் அவர்.
தொழில்நுட்ப பயிற்சி, கல்வி, வர்த்தக் கடன் உதவி போன்ற திட்டங்களுக்கு இந்நிதி ஒதுக்கீடு இந்திய சமுதாயத்திற்கு வழங்கப்பட வேண்டும். இதன்வழி இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியை உறுதிச் செய்வதுடன் மஇகா மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்த முடியும் என்றார் அவர்.