Home நாடு கோத்தாகினபாலுவில் கும்பல்கள் நடத்திய துப்பாக்கித் தாக்குதல்! சபாவில் மீண்டும் பீதி!

கோத்தாகினபாலுவில் கும்பல்கள் நடத்திய துப்பாக்கித் தாக்குதல்! சபாவில் மீண்டும் பீதி!

479
0
SHARE
Ad

Kota-Kinabalu-map-300-x-200கோத்தாகினபாலு ஜனவரி 12 – கறுப்பு ஆடைகளோடு, முகத்தை மறைக்கும் கவசங்கள் அணிந்து கொண்டு சில நபர்கள் நேற்றிரவு மூன்று கும்பல்களாக சென்று கோத்தாகினபாலு நகரில் உள்ள தங்கும் விடுதிகள், வங்கிகள், உணவுக் கடைகள் என சுமார் 30 வணிக மையங்களின் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தினர்.

#TamilSchoolmychoice

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை அதிகாலை 1.00 மணி வரை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இரண்டு வாகனங்களில் வந்த 6 பேர்தான் காரணம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரும்பால் ஆன துப்பாக்கிக் குண்டுகளைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால், தாக்குதல் நடத்தப்பட்ட மையங்களில் கண்ணாடி தடுப்புகள் உடைந்து பலத்த சேதங்கள் ஏற்பட்டன.

ஆனால், நள்ளிரவில் ஆள் நடமாட்டமில்லாத நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால், உயிருடற் சேதம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னால் சபாவின் லகாட் டத்துவில் நிகழ்ந்த அந்நிய சக்திகளின் ஊடுருவல் மற்றும் தாக்குதல்களால் மோசமான பிரச்சனைகளுக்குள்ளான சபாவில் இப்போதுதான் சுமுகமான நிலைமை திரும்பியுள்ளது.

இதற்கிடையில் கோத்தாகினபாலுவில் நேற்று முன்தினம் நடந்த இந்த தாக்குதல்களால் நகரெங்கும் மீண்டும் பீதி கிளம்பியுள்ளது.

கோத்தாகினபாலு, லுயாங், இனானாம் ஆகிய மூன்று இடங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

சில மையங்களில் வைக்கப்பட்டிருந்த தானியங்கி படப்பிடிப்பு கருவிகளின் துணையோடு தாக்குதல் நடத்தியவர்களின் அடையாளங்களைக் கண்டுபிடிக்க காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்தும் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் லகாட் டத்துவில் நிகழ்ந்தது போன்று சூலு ஆயுதக் கும்பல்களுக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர். துடுக்குத் தனமும் கெட்ட நடத்தையும் கொண்ட ஒரு சில இளைஞர்களின் செயலாகத்தான் இது இருக்கும் என தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.