உலுசிலாங்கூர், ஜன 13 – நேற்று உலுசிலாங்கூரில் நடைபெற்ற கிளை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற தன்னை அம்னோ உறுப்பினர் ஒருவர் தாக்கியதாக துணை கல்வியமைச்சர் பி.கமலநாதன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து சிலாங்கூர் ஓசிபிடி உயர் அதிகாரி சுக்ரி யாகோப் கூறுகையில், “உலுசிலாங்கூரில் அம்னோ கிளை கூட்டத்தின் போது பிற்பகல் 2.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது” என்று தெரிவித்தார்.
மேலும், உலுசிலாங்கூர் அம்னோ கிளையைச் சேர்ந்த உயர் பதவியில் இருக்கும் ஒருவர், ஜோகூரில் பணியாற்றும் தனது மகனின் வேலை இடமாற்றம் குறித்து கமலநாதனுடன் விவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது விவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் கமலநாதனைத் தாக்கியதாகவும் சுக்ரி குறிப்பிட்டார்.
உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினருமான கமலநாதன், தன்னை அந்த நபர் தொண்டைப் பகுதியில் குத்தியதாகவும், பதட்டம் ஏற்பட்ட காரணத்தினால் கூட்டத்தை ரத்து செய்யவேண்டிய நிலைக்கு தான் தள்ளப்பட்டதாகவும் புக்கிட் செந்தோசா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
குற்றவியல் சட்டம் 323 பிரிவின் படி, சம்பந்தப்பட்ட நபரிடம் காவல்துறை விசாரணை நடத்தும் என்று சுக்ரி தெரிவித்தார்.