இஸ்லாமாபாத்,பிப்19- பாகிஸ்தான் எல்லையில் இருந்து தலிபான்களால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்கள் 23 பேரின் தலையை தலிபான்கள் துண்டித்தனர். இதனையடுத்து தலிபான்களோடு பேச்சு வார்த்தையை ரத்து செய்வதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
தலிபான்களோடு கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் அரசின் குழுவினர் ரகசிய இடத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். ஆனாலும் தலிபான் தரப்பில் தொடர்ந்து தாக்குதல் சம்பவங்களும், வன்முறை சம்பவங்களும் நிகழ்த்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் தலிபானின் ஆதரவு அமைப்பான மொகந்த் ஏஜென்சி என்ற அமைப்பு வீடியோ டேப் ஒன்றை வெளியிட்டது. அதில் கடந்த 2010ம் ஆண்டு 23 ராணுவ வீரர்களை தலிபான் தீவிரவாதிகள் கடத்தி சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பின் சார்பில் உருது மொழியில் எழுதப்பட்ட ஒரு பக்க அறிக்கை ஒன்று வெளியானது.
அந்த அறிக்கையில் எல்லை பகுதியில் இருந்து அவ்வாறு கடத்தி கொண்டு செல்லப்பட்ட 23 ராணுவ வீரர் களையும் பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக தலை துண்டித்து கொன்று விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்துள்ளது.