ஐதராபாத், பிப் 25 – ஐதராபாத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைமை அலுவலகத்தில் கடலோர ஆந்திரா ராயலசீமா பிராந்தியத்துக்கு உட்பட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை கூட்டம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நேற்று நடந்தது.
இதில், சந்திரபாபு நாயுடு பேசியதாவது, மக்களுக்கு என்ன செய்து விட்டார் என்பதற்காக கிரண்குமார் ரெட்டி புதிய கட்சியை தொடங்குகிறார். அவரது சாதனைகள்தான் என்ன? மாநிலத்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதியில் வந்து போராடிய போது, அவர் வீட்டில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்து போட்டு, பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரசும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதியும், காங்கிரஸ் கட்சியுடன் இணைய இருக்கிறதாம். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஏற்கனவே வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர் ராவுக்கு பணத்தை தவிர வேறெதிலும் குறியில்லை.
இவர்கள் இணைய உள்ள காங்கிரஸ் கட்சியோ நாட்டை விட்டே வெளியேறிக் கொண்டிருக்கிறது. நாட்டின் அனைத்து தீமைகளுக்கும் காங்கிரஸ் கட்சியே முழு பொறுப்பு.
ஆந்திரா, தெலங்கானா இரு மாநிலத்தையும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் சக்தி தெலு ங்கு தேசம் கட்சி மட்டுமே உள்ளது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.