கோலாலம்பூர், மார்ச் 13 – மாயமான மாஸ் விமானம் MH370, ரேடார் தொடர்பை இழந்த பின்னும் சுமார் நான்கு மணி நேரங்கள் வானில் பறந்ததுள்ளது என்று அதன் எஞ்சினின் தானியங்கி தகவல்கள் காட்டுவதாக அமெரிக்க வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
கடைசியாக ரேடார் தொடர்பில் இருந்து விலகுவதற்கு முன்னால் போயிங் 777 விமானம் சுமார் 4 அல்லது 5 மணி நேரம் வானில் சுற்றியிருக்கலாம் என்றும் விசாரணை அதிகாரிகள் சந்தேகமடைந்துள்ளனர்.
மாயமான MH370 விமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள எஞ்சினை கண்காணிக்கும் பணி ‘Rolls-Royce PLC’ நிறுவனத்திடம் உள்ளது. விமானத்தின் எஞ்சினின் இயக்க நிலை குறித்து தொடர்ந்து தானியங்கி தகவல்கள் அதிலிருந்து அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும்.
அதன் அடிப்படையில், ரேடார் தொடர்பிலிருந்து விலகிய பின், சுமார் 4 அல்லது 5 மணி நேரம் விமானம் பயணம் செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
கோலாலம்பூரிலிருந்து விமானம் புறப்பட்ட 1 மணி நேரத்தில், அதாவது சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் கடைசியாக தொடர்பு கொள்ளப்பட்டது. அதன் பின்னர் 2.30 மணியளவில் ரேடார் தொடர்பில் இருந்து விடுபட்டுள்ளது.
எனினும், அமெரிக்க விசாரணை அதிகாரிகள், இது தீவிரவாத சதி வேலையாக இருக்கும் என உறுதியாகத் தெரிவிக்கவில்லை என்றும் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
விமானம் எப்படி ரேடார் தொடர்பை இழந்த பின்னர் பல மணி நேரங்கள் வானில் பறந்துள்ளது என்று அமெரிக்க விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.