கொல்கத்தா, மே 7 – மோடியை சிறையில் தள்ள வேண்டும், என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிரsசாரம் செய்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து பேசினார்.
கூட்டங்களில் மம்தா பானர்ஜி பேசியதாவது, நமது மக்களை அகதிகள் என்று கூறி மோடி அவமானப்படுத்துகிறார். சிலரை ஊடுருவியவர்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார். உங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி, யாரையாவது வெளியேற்ற முயன்றால், உங்களை நான் பாதுகாப்பேன்.
உங்களை யாரும் தொடக்கூட நான் அனுமதிக்க மாட்டேன். அகதிகளுக்கு நான் மரியாதை தருவதாக மோடி கூறுகிறார். யார் அகதி? அகதி என்றால் என்னவென்று அவருக்கு தெரியுமா? 1971-ஆம் ஆண்டுக்கு பிறகு இங்கு வந்தவர்கள் கூட இந்தியர்கள் தான்.
இது தொடர்பாக இந்திரா-முஜிப் உடன்படிக்கையில் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. இன, நிற கலவரம் தொடர்பாக பேசி வருபவருக்கு பிரதமராகும் உரிமை இல்லை. தேர்தல் விதிமுறைகளை மீறும் இந்த செயலுக்கு மோடி இடுப்பில் கயிற்றை கட்டி அவரை சிறையில் தள்ள வேண்டும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வங்காள தேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களை வெளியேற்றுவேன் என்று கூறும் மோடிக்கு, தைரியம் இருந்தால் முதலில் என்னை வெளியேற்றட்டும். நெருப்போடு விளையாட வேண்டாம் என்று அவரை எச்சரிக்கிறேன் என்று மம்தா பானர்ஜி பேசினார்.