Home நாடு புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் போட்டியில்லை: மசீச – தே.மு. வரலாற்று பூர்வ முடிவு!

புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் போட்டியில்லை: மசீச – தே.மு. வரலாற்று பூர்வ முடிவு!

664
0
SHARE
Ad

liow-tiong-lai-aug7கோலாலம்பூர், மே 11 – மலேசிய அரசியலில் நினைவு தெரிந்த வரையில் தேசிய முன்னணி ஏதாவது ஒரு சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடாமல் இதுவரை ஒதுங்கிக் கொண்டதில்லை.

ஆனால், இந்த முறை புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் முதல் முறையாக, மலேசிய சீனர் சங்கம் (மசீச) போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, தேசிய முன்னணியும் போட்டியிடாது என பிரதமர் நஜிப் அறிவித்துள்ளார்.

பாஸ் கட்சி கொண்டு வந்திருக்கும் ஹூடுட் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் குரல் கொடுப்பதற்காக புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டுள்ளதாக மசீச தலைவர் லியாவ் அறிவித்திருந்தாலும், போட்டியிட்டால் தோல்வி நிச்சயம் என்ற சூழ்நிலையால்தான் தேசிய முன்னணி போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice

40,000 வாக்குகள் வித்தியாசத்தில் கர்ப்பால் சிங் 2013இல் வென்ற தொகுதி என்பதால், இங்கு போட்டியிட்டு தங்களின் சக்தியை இழக்காமல், தங்களின் அரசியல் பலத்தை வேறு போராட்டங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள மசீச முடிவு செய்துள்ளது.

Karpalகர்ப்பால் மரணத்தால் ஏற்பட்டிருக்கும் அனுதாப அலை, அந்த அனுதாப அலையைப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக அவரது மகன் ராம் கர்ப்பால் சிங்கே போட்டியில் குதித்திருப்பது போன்ற காரணங்களாலும் தேசிய முன்னணி போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளது.

மலேசிய அரசியலில் இவ்வாறு ஓர் இடைத் தேர்தலில் போட்டியிடாமல் தேசிய முன்னணியோ, அல்லது அதன் பங்காளிக் கட்சிகளுள் ஒன்றோ ஒதுங்கிக் கொள்வது என்பது அண்மையக் காலங்களில் இதுதான் முதல் முறையாகும்.

இருப்பினும் புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் சில சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடக்கூடும் என்றும் அவர்களுக்கு தேசிய முன்னணி மறைமுக ஆதரவு வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மசீசவின் முடிவை புக்கிட் குளுகோர் தொகுதி அம்னோ கண்டித்துள்ளது. அந்த தொகுதியிலுள்ள 12,000 மலாய் வாக்காளர்களை அணுகும் பிரச்சாரங்களைத் தாங்கள் மேற்கொண்டிருந்ததாகவும், தேசிய முன்னணியின் பின்வாங்கல் தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் புக்கிட் குளுகோர் தொகுதி அம்னோ தெரிவித்துள்ளது.