இஸ்தான்புல், ஜூன் 3 – துருக்கி நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள ஒரு மருத்துவமனையில் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் பாஸ் கட்சியின் தலைவர் டத்தோ அப்துல் ஹாடி அவாங் தற்போது தனது உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், கடந்த சில நாட்களாக தனக்கு வழங்கப்பட்ட மருத்துவ கண்காணிப்பினாலும் கிடைத்த ஓய்வினாலும் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, தனது பேஸ்புக் (முகநூல்) இணையப் பக்கத்தில் 67 வயதான ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
“நான் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட நேரத்தில் எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் இங்கே இருந்த வேளையில், எனக்காக எல்லா வகையிலும் உதவிகள் புரிந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆண்டவன் அருளால் தற்போது நலமாக இருக்கிறேன்” என்று ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.
ஹாடி அவாங், தான் மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் தனது முகநூல் இணையப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
திரெங்கானு மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான ஹாடி அவாங் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இஸ்தான்புல் வந்திருந்த போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு எல்லா வகையான உதவிகளையும் வழங்க வேண்டும் என இஸ்தான்புல்லில் உள்ள மலேசிய தூதரகத்திற்கு உத்தரவிட்டிருப்பதாக பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.