ஈப்போ, ஜூன் 6 – குழந்தையை தாயிடம் இன்று ஜூன் 6 -ம் தேதி 12 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டும் அதை நிறைவேற்றாத தனது கணவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பாலர் பள்ளி ஆசிரியையான இந்திராகாந்தி கூறியுள்ளார்.
தனது அனுமதியின்றி கணவரால் முஸ்லிமாக மாற்றப்பட்ட தனது குழந்தை பிரசன்னா டிக்சாவை மீட்க, கடந்த 5 ஆண்டுகளாகப் போராடி வருகின்றார். நீதிமன்ற உத்தரவின் படி, அவரது கணவரான கே.பத்மநாபன் என்ற முகமட் ரித்வான் அப்துல்லா இன்று குழந்தையை இந்திராகாந்தியிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆனால் குழந்தையை ஒப்படைக்கும் நிலையில் தான் இல்லை என வழக்கறிஞரும், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரனிடம் தனது வழக்கறிஞர் மூலமாக பத்மநாபன் கூறியுள்ளார்.
இது குறித்து குலசேகரன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “நீதிமன்ற உத்தரவை பத்மநாபன் மீறியுள்ளார். அவர் இன்று மதியத்திற்குள் தாயிடம் குழந்தையை ஒப்படைத்திருக்க வேண்டும். எனவே அவர் மீது குழந்தையின் தாயார் காவல்துறையில் புகார் அளிக்கவுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மே 30 ம் தேதி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், வரும் ஜூன் 6 ஆம் தேதி குழந்தையை தாயிடம் ஒப்படைப்பதுடன், செலவுத் தொகை 15,000 வெள்ளியும் வழங்க வேண்டும் என ரிட்சுவானுக்கு உத்தரவு பிறப்பித்தது.
அதோடு, குழந்தையை குறிப்பிட்ட நாட்களுக்குள் ஒப்படைக்கத் தவறினால் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறை செல்ல வேண்டியிருக்கும் என்றும் உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.