கோலாலம்பூர், ஜூன் 10 – சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கும் இரண்டு ராட்சச பாண்டா கரடிகளை ஒரு மாதக் காலத்திற்கு இலவசமாக கண்டு களிக்கலாம் என்று புத்ரா ஜெயாவில் நடைபெற்ற மலேசிய குடிநீர் வள நிர்வாகக் கருத்தரங்கைத் தொடக்கி வைத்தப் பின்னர் இயற்கை வள சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்தார்.
பாண்டா கரடிகளின் வருகையால் தேசிய மிருகக் காட்சி சாலைக்கு மக்கள் மத்தியில் புதிய ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாதம் 25 – ம் தேதி இந்த பாண்டா ஜோடிக்கு பிரதமர் புதிய பெயர்களை சூட்டுவார் என்றும் அதன் பின்னர் சுமார், ஒரு மாத காலத்திற்கு பொதுமக்கள் அவற்றை கண்டுகளிக்க வாய்ப்பளிக்கப்படும் என்றும் பழனிவேல் தெரிவித்தார்.
ஒரு மாத காலம் இலவசமாக சென்று பார்வையிடுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது என்றும், இந்த ஆலோசனையை தேசிய மிருகக் காட்சி சாலையில் தாம் பரிந்துரைக்கப் போவதாக பழனிவேல் தெரிவித்தார்.
ஒரு நாளைக்கு 1,200 பேர் இந்தப் பாண்டாக்களைக் காண அனுமதிக்கப்படுவார்கள்.ஒரு முறை காண 200 பேர் என்ற அனுமதியில் 20 நிமிடங்கள் பாண்டாக்களை காண வாய்ப்பு வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகின்றது என்றும் பழனிவேல் தெரிவித்துள்ளார்.
இந்த இலவச காலக் கட்டத்திற்குப் பின்னர் பாண்டாக்களை பார்ப்பதற்கு பெரியவர்களுக்கு 20 வெள்ளியும், சிறியவர்களுக்கு 10 வெள்ளியும் கட்டணமும் விதிக்கப்படும் என்று பழனிவேல் தெரிவித்தார்.