பாக்தாத், ஜூன் 21 – தீவிரவாதிகள் மீது விமானம் மூலமாக தாக்குதலை நடத்தும்படி, ஈராக் விடுத்த கோரிக்கையை அமெரிக்கா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.
தொடர்ந்து முன்னேறி வரும் தீவிரவாத படைகளை கட்டுக்குள் கொண்டு வர அமெரிக்காவின் உதவியை ஈராக் கோரியது. ஆனால் ஈராக்கின் கோரிக்கையை அந்நாட்டு அதிபர் ஒபாமா நிராகரித்துவிட்டார்.
இது குறித்து அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈராக்கில் தீவிரவாதிகளை எதிர்த்து போரிட அமெரிக்கப் படைகளை, அந்நாட்டுக்கு திருப்பி அனுப்ப முடியாது. இந்தப் பிரச்சினையில் ஆயிரக்கணக்கான படைகளை அனுப்பி, பல உயிர்களையும் வளங்களையும் சேதப்படுத்துவதனால் மட்டும், எந்த முடிவையும் கண்டுவிட முடியாது.”
“இந்த விவகாரத்தில், அமெரிக்காவின் தேசிய நலனும் பாதுகாப்பு அடங்கியுள்ளது. ஈராக்கில் நடக்கும் சண்டை மனித உரிமைகள் அடிப்படையிலானது. ஈராக்கில் நடந்துக்கொண்டிருப்பது உள்நாட்டு பிரச்சினை, இதனை ஈராக்கியர்கள் அனைவரும் இணைந்து முடிவினை காண முயற்சி செய்ய வேண்டும்.”
“எனினும், நாங்கள் தேவையின் அடிப்படையில் தயார் நிலையில் உள்ளோம். ஈராக்கில் அதற்கான சூழல் ஏற்பட்டால் நாங்கள் தாக்குதல் நடத்துவோம். பாக்தாத் எல்லையை ஐஎஸ்ஐஎல் நெருங்கினால், நாங்கள் அவர்களை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்.” என்று கூறியுள்ளார்.
ஜப்பான் மற்றும் சீனாவின் உள்விவகாரங்களில் தலையிட்ட அமெரிக்கா, ஈராக்கிற்கு நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கும் பொழுதும் உதவ மறுப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈராக்கில், தங்கள் ஆளுமையின் கீழ் புதிய அரசை செயல்படுத்துவதற்கான நகர்த்துதலை அமெரிக்கா தொடங்கிவிட்டதாகவே கருதப்படுகின்றது.