Home இந்தியா மகாராஷ்டிரா, அசாம், அரியானா மாநில முதல்வர்கள் மாற்றம்?

மகாராஷ்டிரா, அசாம், அரியானா மாநில முதல்வர்கள் மாற்றம்?

596
0
SHARE
Ad

gankirasபுதுடில்லி, ஜூன் 21 – மகாராஷ்டிரா, அசாம் மற்றும் அரியானா மாநிலங்களின் முதல்வர்களை மாற்ற, காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. அதனால், கட்சி அமைப்புகளை மாற்றி அமைக்கும் பணியில், காங்கிரஸ் மேலிடம் ஈடுபட்டுள்ளது.

முதல்கட்டமாக, சில மாநில அமைப்புகளை கலைத்து உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, மகாராஷ்டிரா, அசாம் மற்றும் அரியானா மாநில முதல்வர்களை மாற்ற முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது,

அசாம் முதல்வர் தருண் கோகோயை மாற்ற வேண்டும் என, இரண்டு ஆண்டுகளாக, அவரின் அதிருப்தியாளர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இருப்பினும், கட்சி மேலிடம் அதை கண்டு கொள்ளவில்லை.

#TamilSchoolmychoice

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அசாமில் மொத்தமுள்ள, 14 நாடாளுமன்ற தொகுதிகளில், மூன்று இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இது, முதல்வரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை, மேலும் வலுவடையச் செய்துள்ளது. அதனால், தருண் கோகோய் விரைவில் மாற்றப்படுவார்.

அதேபோல், அரியானாவில், காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்தும், லோக்சபா தேர்தலில், ஒரு இடத்தை மட்டுமே பிடித்தது. அதனால், முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை மாற்ற வேண்டும் என, கட்சிக்குள் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

முதல்வர் ஹூடாவுக்கு எதிரான கோஷ்டிக்கு ஆதரவாக, முன்னாள் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜாவும் செயல்பட்டு வருகிறார். அதனால், நிச்சயம் ஹூடாவின் பதவி பறிக்கப்படலாம். அவருக்குப் பதிலாக, புதியவர் ஒருவர், முதல்வராக நியமிக்கப்படலாம்.

மகாராஷ்டிராவில், முதல்வர் பிருதிவிராஜ் சவான் தலைமையிலான, காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு உள்ளது. இதில், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சவானின் எதிர்ப்பாளர்கள் மட்டுமின்றி, தேசியவாத காங்கிரசும், சவானை மாற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆண்டு இறுதியில், மகாராஷ்டிரா மாநிலத்தில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்குள் முதல்வரை மாற்றினால் மட்டுமே, கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உருவாகும் என, நம்பப்படுகிறது.

தேசியவாத கா ங்கிரஸ், தலைவரான சரத்பவார், சமீபத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் அந்தோணி மற்றும் அகமது படேல் ஆகியோரை சந்தித்து, முதல்வர் மாற்றம் தொடர்பாக விவாதித்துள்ளார்.

அத்துடன், மகாராஷ்டிரா ஆளும் காங்கிரஸ், கூட்டணி சட்டமன்ற உருப்பினர்கள் பலரும், முதல்வர் சவானை மாற்ற வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

அதனால், இந்த மூன்று மாநிலங்களிலும், முதல்வர்களை மாற்ற, காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்துள்ளது. அத்துடன், கட்சியின் மாநில தலைமையிலும் மாற்றங்கள் நிகழலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.