லண்டன், ஜூன் 21 – இந்தியாவில் இருந்து மாம்பழம் இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு விதித்துள்ள தடையை நீக்குவதற்கு பிரிட்டன் உதவும் என்று அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து பிரிட்டனில் வாழும் முக்கிய வெளிநாட்டு வாழ் இந்தியரும், அந்நாட்டின் தொழிலாளர் கட்சி எம்.பி.யுமான கீத் வாஸ் கூறியதாவது, “பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இந்தியாவின் அல்போன்சா ரக மாம்பழத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், இந்திய அதிகாரிகளுக்கு பிரிட்டன் அனைத்து வகையிலும் ஆதரவு மற்றும் ஆலோசனைகளை அளிக்கும் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 28 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து பெருமளவு மாம்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஏற்றுமதியாகும் மாம்பழ பண்டல்களை விமான நிலையத்தில் சுகாதார அதிகாரிகள் சோதித்தபோது அவற்றில் பூச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதையடுத்து, அந்தப் பூச்சிகளால் ஐரோப்பிய ஒன்றியத்தில் பயிரிடப்படும் காய்கறிப் பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகக் கூறி கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தாற்காலிகத் தடை விதித்தது.