Home இந்தியா கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை விரைந்து தாருங்கள் – சுவிஸ் அரசுக்கு இந்தியா கடிதம்!

கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை விரைந்து தாருங்கள் – சுவிஸ் அரசுக்கு இந்தியா கடிதம்!

669
0
SHARE
Ad

Indian-black-moneyடெல்லி, ஜூன் 24 – கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை விரைந்து தாருங்கள் என்று சுவிட்சர்லாந்து அரசுக்கு இந்தியா கடிதம் எழுதியுள்ளது.

சுவிட்சர்லாந்து (சுவிஸ்) நாட்டின் வங்கி ஊழியர் ஒருவர், இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டவர்களின் வங்கி கணக்கு விவரங்களை திருடி வெளியிட்டதுடன், அதுகுறித்த தகவலை வருமானவரி இலாகாகளுக்கும் அனுப்பி வைத்தார்.

அப்போது, சுவிஸ் நாட்டின் பல்வேறு வங்கிகளில் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கறுப்பு பணத்தை இந்தியர்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

#TamilSchoolmychoice

இதையடுத்து இந்திய அரசு, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புபண பட்டியலை தருமாறு பலமுறை கேட்டுக்கொண்டும், அதனைத்தர சுவிஸ் அரசு தொடர்ந்து மறுத்து வந்தது.

Swiss banksஇந்த நிலையில், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். அந்த குழுவும் விசாரணையை தொடங்கிவிட்டது.

இந்நிலையில் இந்தியர்களின் கறுப்பு பண விவகாரத்தில், திடீர் திருப்பமாக சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தின் உண்மையான உரிமையாளர்கள் பற்றியும், பணம் பதுக்கி வைத்துள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருவதாக சுவிஸ் அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.

இதுதொடர்பான தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருப்பதாகவும், இந்தியா அமைத்துள்ள சிறப்பு புலனாய்வு குழுவுக்கு அனைத்து உதவிகளையும் தங்களது அரசு வழங்கும் என்றும் சுவிஸ் அரசாங்கம் தெரிவித்தது.

swiss-bank-இதுகுறித்து மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லியிடம், டெல்லியில் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது,

“சுவிஸ் நாட்டின் பல்வேறு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் பற்றிய தகவல்களை தருவதற்கு அந்நாட்டு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு தர இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

எனினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் அந்த நாட்டிடம் இருந்து இதுவரை பெறப்படவில்லை. சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் தொடர்பான பட்டியலை விரைந்து பெறுவது தொடர்பாக சுவிஸ் நாட்டின் சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு உடனடியாக இந்தியா கடிதம் எழுதியுள்ளது.

அவர்களிடம் கறுப்பு பணம் தொடர்பாக எந்த விரிவான தகவல் இருந்தாலும் அதனை பகிர்ந்து கொள்ளும்படியும், இந்த தகவல்களை விரைந்து தருமாறும் அதில் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறது.

BlackMoneyஇதில் சுவிஸ் அரசு, இந்தியாவுடன் ஒத்துழைத்து செயல்பட்டால் பயன் தரும் முடிவுகளை வெளிக்கொண்டு வர இயலும். இதனிடையே டெல்லியில் உள்ள சுவிஸ் தூதரகம் அந்நாட்டின் நிதி அமைச்சகம் சார்பாக விடுத்துள்ள அறிக்கையில், ‘‘வரி ஏய்ப்பு தொடர்பான போராட்டத்தில் இந்தியாவின் ஆர்வத்தை சுவிஸ் அரசு புரிந்து கொண்டுள்ளது.

எனவே, இந்தியர்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்கும் விதத்தில், இந்தியாவின் புதிய அரசுடன் இணைந்து செயல்பட சுவிஸ் அரசாங்கம் தயாராக இருக்கிறது. இதில் சர்வதேச தரத்திற்கு ஏற்ப ஒத்துழைப்பு தருவதிலும் சுவிஸ் அரசு உறுதியாக உள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கறுப்பு பண விவகாரம் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், “கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கு ஏதுவாக, மத்திய அரசின் சிறப்பு புலனாய்வு குழு கேட்டுக்கொண்டுள்ளவாறு,

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அதுதொடர்பான உரிய தகவல்களையும், ஆவணங்களையும் தேவைப்படும் நேரத்தில் வழங்கவேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.