நியூயார்க், ஜூன் 26 – ஈராக்கில் நடந்து வரும் உள்நாட்டு போரில் தீவிரவாதிகளால் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள, இந்திய மற்றும் துருக்கி தொழிலாளர்களை மீட்க, ஈராக் அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஐ.நா.சபை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், ஷியா பிரிவு முஸ்லிகளுக்கும் இடையே நடந்து வரும் சண்டையில், அந்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரங்கள் தீவிரவாதிகள் வசம் வந்து விட்டன. 3 வாரங்களாக அரசு படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்து வருகிற சண்டையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, தீவிரவாதிகள் கைப்பற்றிய மொசூல் நகரில், கட்டிட வேலை செய்து வந்த இந்திய தொழிலாளர்கள் 40 பேரும், துருக்கி நாட்டு தூதரகத்தில் இருந்து 48 பேரும் கடத்தப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது வரை அவர்களின் நிலை என்ன என்று தெரியாத நிலையில், இந்த விவகாரத்தை ஐ.நா. சபை கையில் எடுத்துள்ளது.
இது குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஈராக்கில் பிணைய கைதிகளாக உள்ள மக்களை மீட்க உரிய நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுக்க வேண்டும். மேலும், இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப் பட வேண்டும்” என்று கூறியுள்ளது.