Home கலை உலகம் ‘பாஸ்போர்ட் மணியம்’ – திகில், நகைச்சுவை நிறைந்த வித்தியாசமான முயற்சி!

‘பாஸ்போர்ட் மணியம்’ – திகில், நகைச்சுவை நிறைந்த வித்தியாசமான முயற்சி!

766
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 01 – டெனிஸ், விமலா தம்பதியினரின் வீடு புரொடக்சன்ஸ் மற்றும் சன்ரே பிக்சர்ஸ் ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பில், ‘பாஸ்போர்ட் மணியம்’ என்ற புதிய திரைப்படத்தின் குறுந்தட்டு (டிவிடி) வெளியீட்டு விழா கடந்த வாரம் ஃபினாஸ் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முன்னாள் துணை அமைச்சர் டத்தோ மேக்லின் டி குரூஸ், செய்தியாளர்கள் முன்னிலையில் அதிகாரபூர்வமாக குறுந்தட்டை வெளியிட்டார்.

IMG_2202

#TamilSchoolmychoice

 (படத்தின் குறுந்தட்டை டத்தோ மேக்லின் டி குரூஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்)

கடந்த 3 ஆண்டுகளாக, பல்வேறு பிரச்சனைகள் காரணமாக வெளியாவதில் தாமதமாகி வந்த இந்த திரைப்படம், வீடு புரொடக்சன்ஸ் உடன் கூட்டு தயாரிப்பில் ஈடுபட்டவுடன் புதிய பொலிவுடன் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கண்ணன் தியாகராஜன் இயக்கத்தில், ரமேஷ்குமார், ‘வெட்டி பசங்க’ புகழ் ஆல்வின் மார்ட்டின், பாலசுந்தரம், கிளாரன்ஸ் குணா, பிரவீணா, ரவி கேரி, இளங்கோ உள்ளிட்ட நடிகர்கள் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

IMG_2219

 (பட வெளியீட்டிற்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பாஸ்போர்ட் மணியம் குழுவினர்)

எமலோகத்தில் இருந்து பூமிக்குத் தப்பி வந்த ஆவிகளை பிடிக்கும் பொறுப்பை, பூமியில் வாழும் ஒருவரிடம் எமன் ஒப்படைத்தால் என்னவாகும் என்பதை மிகவும் வித்தியாசமான முறையில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இப்படத்தை இயக்கியுள்ளார் கண்ணன்.

பல வருடங்களுக்கு முன் வெளிவந்த, தமிழ்நாட்டு திரைப்படமான ‘லக்கி மேன்’ -ல், எமன் மற்றும் சித்திரகுப்தனாக கவுண்டமணி, செந்தில் ஆகியோர் சிறப்பாக நடித்திருப்பார்கள். அந்த காலகட்டத்தில் அந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் அப்படியொரு கதைக் கருவை எந்த ஒரு இயக்குநரும் தேர்ந்தெடுக்கவில்லை.

மலேசியாவில் முதன் முறையாக இயக்குநர் கண்ணன் அப்படி ஒரு கதைக் கருவை தேர்ந்தெடுத்ததோடு, அதை நவீனப்படுத்தி, ஆவிகளை பிடித்து மின்னஞ்சல் செய்வது போன்ற பல கற்பனைகளையும் புகுத்தி மிகவும் வித்தியாசமான முறையில் இயக்கியுள்ளார்.

எமன் கதாப்பாத்திரத்திற்கு ஆல்வின் கன கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். பூமியில் வாழும் மானிடராக ரமேஷ்  மற்றும் அவரது நண்பராக வரும் பாலா ஆகியோர் மிகவும் இயல்பாக நடித்திருக்கின்றனர்.

கிளாரன்ஸ் என்ற நடிகர் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் செய்திருக்கிறார். அவரது வித்தியாசமான நடிப்பு திகில் காட்சிகளுக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.

இந்த படத்திற்கு, டேடி சேக்கின் பின்னணி இசை, திகில், காமெடி காட்சிகளுக்கு ஏற்ப மாறுபட்டு பார்வையாளர்களை படத்துடன் ஒன்றச் செய்கின்றது.

1453320_248321468661264_2070138039_n

(பாடல் காட்சியில் டேனிஸ்குமார், விகடகவி மகின் – படம்: பாஸ்போர்ட் மணியம் பேஸ்புக் பக்கம்)

‘பாஸ்போர் மணியம்’ என்ற பாடலை டேனிஸ் மற்றும் விகடகவி மகின் ஆகிய இருவரும் பாடியுள்ளதோடு, அதில் நடனமும் ஆடியிருப்பது அவர்களது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை சேர்க்கலாம்.

தற்போது நாடெங்கிலும் இந்த படத்தின் குறுந்தட்டுகள் பரபரப்பான விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தி, படங்கள் – ஃபீனிக்ஸ்தாசன்