கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – அரசியல் நெருக்கடிகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் சிலாங்கூர் மாநிலத்தில் தேசிய முன்னணிக்கு சாதகமாக ஆட்சி மாற்றம் ஏற்படும்போது,பழனிவேலுவின் கை ஓங்கும் என்றும் அதனால் மஇகா பலம் பெறும் என்றும் நேற்றைய ஒரு தமிழப் பத்திரிக்கையில் அரசியல் ஆரூடச் செய்தி ஒன்று வெளிவந்திருக்கின்றது.
ஆழ்ந்து பார்த்தால், இதைவிட அபத்தமான கண்ணோட்டம் இருக்க முடியாது என்றும் இதைவிட சிறப்பாக மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முடியாது என்றும் சிலாங்கூர் மஇகாவைச் சேர்ந்த சில தரப்பினர் கூறியுள்ளனர்.
சிலாங்கூரின் தலைவிதி அநேகமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தெரிந்துவிடும். நடக்கவிருக்கும் மக்கள் கூட்டணி தலைவர் கூட்டத்தில் பாஸ் கட்சி எடுக்கவிருக்கும் நிலைப்பாட்டை வைத்துத்தான் சிலாங்கூரில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்பது தெரியும்.
அப்படியே பாஸ் கட்சியும் தேசிய முன்னணியும் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினாலும், சிலாங்கூரில் நடக்கும் காலிட்டின் அரசியல் விளையாட்டுக்களால் கொதித்துப் போய் இருக்கும் மக்கள் அதற்கு கடுமையான எதிர்ப்பையே வழங்குவார்கள், என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மஇகாவும் இந்தியர்களிடையே கடுமையான எதிர்ப்பையே எதிர்நோக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிலாங்கூரைச் சேர்ந்த ஒரு மஇகா தலைவர் “மஇகாவுக்கு என சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி எதுவும் இல்லை என்பதால் ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியும் கிடைக்காது. ஊராட்சி, நகராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் பதவிகளையும் மஇகாவினருக்கு முன்பு போல் புதிய ஆட்சியில் அள்ளிக் கொடுப்பார்கள் என கனவு கான முடியாது. காரணம், நடக்கப்போவது தேசிய முன்னணி ஆட்சியல்ல. தேசிய முன்னணியின் ஆதரவோடு பாஸ் கட்சி காலிட்டை பகடைக் காயாக வைத்து நடத்தப் போகும் ஆட்சி. இதனால் ஏற்கனவே, மக்கள் செல்வாக்கை இழந்து விட்ட பாஸ் கட்சியோடு இணைந்து பணியாற்றுவதால், மஇகா இந்தியர்களிடையேயான செல்வாக்கில் பலவீனம்தான் அடையுமே தவிர பலம் பெற முடியாது” என்று கூறினார்.
“கட்சியை உள்ளிருந்து பலப்படுத்த வேண்டும். இன்றைக்கு சிலாங்கூர் மாநிலத்தின் தலைவராக பழனிவேல் இருந்தாலும், கட்சியின் உட்கட்ட அமைப்பை பலப்படும் முயற்சிகளோ, தொகுதி ரீதியாக பலப்படுத்தும் முயற்சிகளோ எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை. அதைச்செய்தால்தான் கட்சி பலம் பெறுமே தவிர, சூழ்ச்சியால் ஆட்சியைக் கவிழ்த்து அதில் ஒட்டிக் கொண்டு, அரசியல் நடத்துவதால் மஇகா பலம் பெறவும் முடியாது. பழனிவேலுவின் கையும் ஓங்காது” என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த மஇகா தலைவர் காட்டமாகக் கூறினார்.
“இப்படித்தான் பேராக்கிலும் செய்தார்கள். மீண்டும் தேசிய முன்னணி நேரடியாகவே ஆட்சிக்கு வந்தாலும், மஇகா பலம் பெற்றதா? ஏற்கனவே இருந்த 4 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றை அம்னோவுக்கு தாரைவார்த்துக் கொடுத்தார் பழனிவேல். அதற்கு பதிலாக செனட்டர் பதவி மஇகாவுக்குக் கிடைக்கும் என்றார். ஓராண்டு ஆகியும் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. போட்டியிட்ட மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியிலும் மஇகா தோல்வி கண்டதுதான் மிச்சம்” என்றும் அந்த மஇகா தலைவர் மேலும் கூறினார்.
“பழனிவேலுவின் மோசமான தலைமைத்துவத்தால், மஇகாவின் தோற்றம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் – உட்கட்சிப் போராட்டம் மோசமான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அப்படியே சிலாங்கூரில் மறுதேர்தல் வைக்கப்பட்டால், பலவீனமான மஇகா மீண்டும் சட்டமன்றங்களை வெல்வது கடினம். காலிட்டின் அணுகுமுறைகளால் ஆத்திரம் அடைந்திருக்கும் மக்கள், எதிர்க்கட்சிகளுக்குத்தான் வாக்களிப்பார்கள். எனவே, நமது கட்சியை நாமே அரசியல் ரீதியாக எப்படி பலப்படுத்துவது என உழைப்பதில்தான் கட்சி பலம் பெறுமே தவிர, வெறும் ஆட்சி மாற்றத்தால், மஇகாவோ, பழனிவேலுவோ பலம் பெற்றுவிட முடியாது” என்பதும் இன்னொரு சாராரின் கருத்தாக இருக்கின்றது.