Home நாடு கருப்பண்ணன் உண்மையை திசை திருப்ப வேண்டாம் – விருந்துக்கான குறுந்தகவல் அனுப்பியதே அவர்தான்! – டத்தோ...

கருப்பண்ணன் உண்மையை திசை திருப்ப வேண்டாம் – விருந்துக்கான குறுந்தகவல் அனுப்பியதே அவர்தான்! – டத்தோ ஹென்ரி பதிலடி  

613
0
SHARE
Ad

Henry-Dato-300-x-200பட்டவொர்த், ஆகஸ்ட் 13 – “எதிர்க்கட்சி ஆதரவாளர் ஓம்ஸ் தியாகராஜனை வைத்து விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததே கருப்பண்ணன்தான். இதனை மூடி மறைத்து கதையை திசை திருப்ப அவர் முயல வேண்டாம். விருந்துக்கான அழைப்புகளை குறுந்தகவல் வாயிலாக அனுப்பியதே அவர்தான். அதே சமயம் அந்த விருந்து ரத்து செய்யப்பட்டதாக குறுந்தகவல் அனுப்பியதும் அவர்தான். இப்படியிருக்கையில், எனது அறிக்கை உண்மைக்கு புறம்பானது என ஒரு பத்திரிக்கைச் செய்தியில் அவர் கூறி, பிரச்சனையைத் திசை திருப்பப் பார்க்கின்றார்” என மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், பினாங்கு மாநில மஇகா தொடர்புக் குழுவின் பொருளாளருமான டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் இன்று பதிலடி கொடுத்தார்.

பத்திரிக்கைகளுக்கு வெளியிட்ட அறிக்கையொன்றில், டத்தோ ஹென்ரி பின்வருமாறு தெரிவித்துள்ளார்;-

“பத்திரிக்கை ஒன்றில் இன்று வெளிவந்த செய்தியின்படி, “அப்படியொரு விருந்துக்கு ஏற்பாடு செய்திராதபோது தாம் ஏற்பாடு செய்தது என்று கூறுவது கண்டிக்கத்தக்கது” என்று கருப்பண்ணன் கூறியிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

அதே செய்தியில், அப்படியே அந்த விருந்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தாலும் ம.இ.கா சட்டவிதியில் குற்றம் என்று குறிப்பிடவில்லை என்றும் கருப்பண்ணன் கூறியிருக்கின்றார்.  இப்படி முன்னுக்குப் பின் முரணாக கருப்பண்ணன் பேசியிருக்கின்றார்.

மஇகா சட்டவிதிகள் சொல்வது என்ன?

ஒரு மாநில மஇகா தலைவராக, ஒரு தொகுதி தலைவராக இருந்து கொண்டு, அதே வேளையில் வழக்கறிஞராகவும் இருக்கும் கருப்பண்ணன் மஇகா சட்டவிதிப் புத்தகத்தை கொஞ்சம் புரட்டிப் பார்ப்பது நல்லது. மஇகா சட்டவிதிகளில் பல இடங்களில் மஇகாவின் நலன்களுக்கு எதிராக நடந்து கொள்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு, நமது மஇகாவுக்கு எதிராக பொதுத் தேர்தல் காலங்களில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டவர்களை வைத்துக் கொண்டு மஇகா கிளைத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து விருந்துபசரிப்பு நடத்துவது கட்சியின் நலன்களுக்கு முரணானது என்பது பள்ளிக் குழந்தைகளுக்குக் கூட தெரியும். ஆனால், வழக்கறிஞரான கருப்பண்ணனுக்கு மட்டும் முரண்பட்டதாகத் தெரியவில்லை.

நான் கேட்கின்றேன் கருப்பண்ணனைப் பார்த்து. இதையே மற்றொரு பினாங்கு தொகுதித் தலைவர் செய்திருந்தால் நீங்கள் எல்லாம் சும்மா விட்டிருப்பீர்களா? இந்நேரம் பாய்ந்து, கடித்துக் குதறி, அந்த தொகுதித் தலைவரை கட்சியிலிருந்தே நீக்க வேண்டும் என்று முழக்கமிட்டிருப்பீர்கள்.

நீங்கள் எதிர்க்கட்சிக்காரர்களை வைத்து விருந்து ஏற்பாடு செய்த, கட்சியின் நலனுக்கு எதிரான செயல், நீங்கள் மாநிலத் தலைவர் என்பதால் மட்டும் நியாயமாகி விடுமா?

ஆகஸ்ட் 12 தேதியிட்ட தமிழ்ப் பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் படி, ஓம்ஸ் தியாகராஜனுக்கு ஏற்பாடு செய்ததற்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு காரணம் கோரும் கடிதம் அனுப்பினால் அதற்கு பதிலளிக்கத் தயாராக இருக்கின்றேன் என்றும் கருப்பண்ணன் கூறியுள்ளார். அப்படியானால், விருந்து ஏற்பாடு செய்ததை அவர் ஒப்புக் கொள்கின்றார் என்றுதானே பொருள்?

முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் கருப்பண்ணன்

இப்படி எங்கே தனது தவறு வெளியே வந்துவிட்டதே என்று பயந்து போயிருக்கும் கருப்பண்ணன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியிருப்பதோடு, துணைக்கும் தேசியத் தலைவர் பெயரையும் பயன்படுத்தியிருக்கின்றார்.

பழனிவேல் என்னை நியமித்திருக்கின்றார் என்கின்றார். கருப்பண்ணனை மட்டுமல்ல எல்லா மாநிலத் தலைவர்களையும் தேசியத் தலைவர்தான் மஇகா சட்டவிதிகளின்படி நியமிப்பார்.

தேசியத் தலைவர் தன்னை நியமித்திருக்கின்றார் என்பதால், தான் செய்தது சரிதான் என கருப்பண்ணன் வாதிட வருகின்றாரா? அல்லது இதனை தேசியத் தலைவரின் அனுமதியோடு செய்தேன் என்று சொல்ல வருகின்றாரா?

தான் கட்சியின் நலனுக்கு முரண்பாடாக செயல்பட்டதற்கு தேசியத் தலைவர் மீது பழிபோட்டுத் தப்பிக்கப் பார்க்கும் கருப்பண்ணனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். உங்கள் தவறை ஒப்புக் கொள்ளுங்கள். ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ளுங்கள்.

அதற்காக தேசியத் தலைவரை உங்களுக்குத் துணையாக அழைக்காதீர்கள். அவர் மீது பழிபோடப் பார்க்காதீர்கள்.

ஓம்ஸ் தியாகராஜன் நிகழ்ச்சியை நடத்தியதை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளுங்கள். அந்த நிகழ்ச்சிக்காக நீங்கள் அனுப்பிய குறுந்தகவலும், அதே நிகழ்ச்சியை ரத்து செய்து நீங்கள் அனுப்பிய குறுந்தகவலும் பல மஇகா கிளைத் தலைவர்கள் வசம் இருக்கின்றது என்பதையும் மறந்துவிடாதீர்கள்”

-இவ்வாறு பினாங்கு பாகான் தொகுதித் தலைவருமான டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் தனது பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருக்கின்றார்.