மதுரை, ஆகஸ்ட் 26 – மதுக் கடைகளை மூட வலியுறுத்தி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மதுக் கடைகளுக்கு அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடைபெற்றது.
லஞ்சம், ஊழல் மற்றும் மதுவை ஒழிப்பதற்காக பாடுப்பட்டு வரும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம், மதுக் கடைகளை மூடக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, மதுக் கடைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களும், ஆண்களும் பங்கேற்றனர்.
மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அண்ணா பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணா துரை தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மதுக் கடைகள் மூட வேண்டும். முதல் கட்டமாக அதன் வேலை நேரத்தை 12-ல் இருந்து 6 மணி நேரமாக குறைக்க வேண்டும்.
குற்றச்செயல்களை உருவாக்கும் மதுக்கூடங்களை (பார்) உடனடியாக மூட வேண்டும். மதுக் கடைகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறையளிக்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களாக எழுப்பப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில் ஒரே கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மதுவால் கணவரை இழந்துள்ளனர். மதுவுக்கு அடிமையான கணவரின் கொடுமையால் பல பெண்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.
மதுரையில் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளி மேஜையை விற்று மது குடித்துள்ளனர். அந்தவகையில், மதுக்கடைகள் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள சீரழிவுகள் இனியும் தொடரக் கூடாது என்பதற்காக இந்தப் போராட்டம் நடைபெறுவதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தை முன்னிட்டு மது என எழுதப்பட்ட பதாகைக்கு மாலை அணிவித்திருந்தனர் போராட்டக் குழுவினர். தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் மதுக் கடைகளை மூடக்கோரி அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடைபெற்றது.