சென்னை, செப்டம்பர் 3 – மதுக் கடைகளை மூடக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் இணைந்து சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடியிருப்புப் பகுதிகளில் மதுக் கடைகளை மூடக் கோரி, பாமக சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ராமதாஸுடன் இணைந்து, குமரி அனந்தனும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது, “இந்தியாவில் ஆண்டுக்கு 18 லட்சம் பேர் மது காரணமாக உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் 2 லட்சம் பேர் இறக்கின்றனர். 11 வகையான உயிர்க் கொல்லி நோய்கள் மதுவால் உருவாவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் குஜராத், நாகாலாந்து ஆகிய மாவட்டங்களில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. கேரளத்தில் அக்டோபர் மாதம் முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்பட உள்ளது.
ஆனால் தமிழகத்தில் மட்டும் கூடுதலாக மதுக்கடைகள் திறக்கப்படக் கூடிய நிலை இருக்கிறது. இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு ஒரு சவால் விடுக்கிறேன்.
சட்டப்பேரவைத் தேர்தலில் மதுக் கடைகளை ஒழிப்போம் என்று கூறி பாமக மக்களைச் சந்திக்கும். கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால், மதுக் கடைகளை மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு உயர்நீதின்றம் தீர்ப்பு கூறியது. அந்தத் தீர்ப்பை அரசு அமல்படுத்த முன்வரவேண்டும் என்றார் ராமதாஸ்.