Home இந்தியா 2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: கருத்துக் கணிப்பும் களேபரமும்!

2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: கருத்துக் கணிப்பும் களேபரமும்!

1709
0
SHARE
Ad

5539sckசென்னை – பூமிப்பந்தின் சுழற்சியில் காலங்கள் மாறும்; காட்சிகளும் மாறும். இது பூகோள விதி. அதுபோல் மாறி வரும் காலச்சூழலுக்கேற்ப அரசியலும் மாறும்; ஆட்சிகளும் மாறும். இது அரசியல் நியதி.

இந்த நியதியை மாற்றியவர் எம்.ஜி.ஆர் மட்டுமே! அவர் தமிழகத்தை ஆண்டபோது அவரைத் தவிர யாராலும் ஆட்சிப் பீடத்தில் ஏற முடியவில்லை. 1977 தொடங்கி ஒவ்வொரு தேர்தலிலும் அவரே வென்று முதலமைச்சராக முடி சூடிக் கொண்டார். அவர் கோலோட்சிய 13 ஆண்டு காலத்தில் ஆனானப்பட்ட கருணாநிதியால் கூட அவரை எதிர்த்துப் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகே கருணாநிதியால் தலையெடுக்க முடிந்தது. ஆனாலும் அவரால் எம்.ஜி.ஆர் போல் நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியவில்லை. 13 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்த கலைஞரால் 1989 – 1991 ஆகிய இரண்டு ஆண்டுகள் மட்டுமே முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்க முடிந்தது. அதற்கடுத்து அதிரடியாய் மிகப் பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டு, ஜெயலலிதா முதலமைச்சரானார்.

#TamilSchoolmychoice

1991 முதல் 1996 வரை தோழி சசிகலாவுடன் தவறான அரசியல் ஆட்டம் ஆடி அடுத்த தேர்தலில் படுதோல்வி கண்டார். ஜெயலலிதாவின் படாடோப அரசியலால் பாதிக்கப்பட்ட மக்கள், அடுத்து வந்த 1996 தேர்தலில் கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தனர்.

அதன்பின்பு கருணாநிதி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு, 2001ல் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆனார். அடுத்து 2006ல் ஜெயலலிதா தோற்று கருணாநிதி முதலமைச்சர் ஆனார். அதற்கடுத்து 2011ல் ஜெயலலிதாவையே மீண்டும் முதலமைச்சராக மக்கள் தேர்ந்தெடுத்தனர்.

இப்படித்தான் கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் அரசியல் ஆடு புலி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க, அ.தி.மு.க என்று மாறி மாறித் தான் வாக்களித்து வருகிறார்கள். மக்கள் என்ன நினைத்து வாக்களிக்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.

மக்களின் எண்ணவோட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு தேர்தலின் போதும், சில அமைப்புகள் மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தி வெளியிடுவதுண்டு.அந்தத் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் எனத் தெரிவிக்கும் முன்னோட்டம்- வெள்ளோட்டம் தான் கருத்துக் கணிப்பு. வெற்றி வாய்ப்பு அதிகம் எனச் சாதகமாக முடிவு வருவோருக்கு அது தேன் போல் இனிக்கும்; வெற்றி வாய்ப்புக் குறைவு என்போருக்கு அது தேளாகக் கொட்டும்.

கருத்துக் கணிப்பு என்பது ஒரு வகையில் குறி சொல்வது போலத்தான். சாதகமான பதில் வந்தால் மனத்தில் புதுத் தெம்பு பிறக்கும்; எக்கச்சக்க உற்சாகம் சுரக்கும். அந்த நேர்மறையான எண்ணமே வெற்றிக்கு வழி வகுக்கும். அதுவே பாதகமான பதிலாக இருந்தால் மனத்தில் சோர்வும் அயற்சியும் மிகும். அந்த எதிர்மறையான எண்ணமே தோல்விக்கு இட்டுச் செல்லும்.

அதனால் தான் கருத்துக் கணிப்பு வெளி வந்ததும் பாதகமான முடிவைப் பெற்றவர்கள் பதறித் துடிக்கின்றனர்; அலறி அறிக்கை விடுக்கின்றனர்.

அதுபோல், வரவிருக்கும் 2016 – தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டும் மக்கள் ஆய்வுக் குழு அண்மையில் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவு வெளியிட்டது. அக்கருத்துக் கருத்துக் கணிப்பால் களேபரமே உண்டானது.

லயோலா கருத்துக் கணிப்பு விவரம்:

சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தின் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வுக் குழு கருத்துக் கணிப்பை வெளியிட்டது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் எனப் பெரும்பாலான பொதுமக்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் அந்தக் கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி அதிமுக-விற்கு ஆதரவாக 34.1 சதவீதம் பேரும், திமுக-விற்கு 32.6 சதவீதம் பேரும், தேமுதிக-விற்கு 4 சதவீதம் பேரும், பாமக-விற்கு 3 சதவீதம் பேரும், பாஜக-விற்கு  2.9 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

மேலும், அடுத்த முதலமைச்சராகும் தகுதி, திறமை, வாய்ப்பு யாருக்கு உள்ளது என்று முன்வைக்கப்பட்ட கேள்விக்கு ஜெயலலிதா என 31.56 சதவீதம் பேரும், ஸ்டாலின் என  27.98 சதவீதம் பேரும், கருணாநிதி என 21.33 சதவீதம் பேரும், விஜயகாந்த என 6.24 சதவீதம் பேரும், அன்புமணி என 2.27 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், அடுத்த முதலமைச்சர் ஆவதற்குத் திமுக தலைவர் கருணாநிதியை விட, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு 6.65 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர் என்பதாகும்.

இது மு.க.ஸ்டாலினின் எதிரியான மு.க.அழகிரிக்குப் பிடிக்கவில்லை; கொதித்துப் போய்விட்டார்.

மு.க.ஸ்டாலினா? திமுக அம்பேல் தான்- அழகிரி!

azhakiri“முதலமைச்சர் ஆவதற்குக் கருணாநிதியை விட மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவா? அந்தக் கருத்துக் கணிப்பு உண்மையானதல்ல. திமுக என்றால் கருணாநிதி தான்; கருணாநிதி என்றால் அது திமுக தான்.அதில் வேறு யாருக்கும் இடம் கிடையாது.திமுக வெற்றி பெற்றால் கருணாநிதி தான் முதலமைச்சராக வர வேண்டும்.

ஸ்டாலினை முன்னிறுத்தினால் திமுக படுதோல்வியடைவது உறுதி. நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலினை முன்னிறுத்தியதால்தான் திமுக படுதோல்வி அடைந்தது என்பது ஞாபகம் இருக்கட்டும்” என்று பொரிந்து தள்ளிவிட்டார் அழகிரி.

​இதற்குப் பதிலளித்த மு.க.ஸ்டாலின், “கருத்துக்கணிப்பை நம்பி திமுக அரசியல் நடத்த வில்லை. எப்போதும் திமுக-வின் முதலமைச்சர் வேட்பாளர் கலைஞர் கருணாநிதி தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என்று அழகிரிக்கு மறைமுகமாகக் கொட்டு வைத்தார்.

இது கருத்துக் கணிப்பல்ல; கருத்துத் திணிப்பு- ராமதாஸ்!

1435105721-2321மக்கள் ஆய்வுக் குழு வெளியிட்டுள்ள இந்தக் கருத்துக்கணிப்பு முரண்பாட்டின் மொத்த உருவமாக அமைந்திருப்பதாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

“முரண்பாட்டின் மொத்த உருவமாக அமைந்துள்ள இந்தக் கருத்துக் கணிப்பை எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கருத்துக்கணிப்பை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிடுவதில் காட்டப்பட்ட அவசரமும், கருத்துக் கணிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட மாதிரிகளும் பல்வேறு உள்நோக்கங்களை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.

ஒரு மாநிலத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவிருக்கும் தேர்தலில் மக்களின் மனநிலையை அறிய வேண்டுமானால், விரிவான முறையில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இந்தக் கருத்துக்கணிப்பு மொத்தம் 80 தொகுதிகளில் 3500 பேரிடம் மட்டுமே அதாவது ஒரு தொகுதியில் 43 பேரிடம் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது. ஐந்தரை கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டிய விசயத்தை அதில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லாதவர்களின் மூலம் தீர்மானிக்க விரும்புவது அபத்தம் மட்டுமின்றி, ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் செயல் ஆகும். ஆக மொத்தத்தில் இது கருத்துக் கணிப்பு அல்ல; கருத்துத் திணிப்பு” என்று அவர் கருத்துக் கணிப்பை மறுத்துக் கூறியுள்ளார்.

சூட்கேஸ் வாங்கிட்டாங்க- பிரேமலதா!

hqdefaultதேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, “கருத்து கணிப்பு வெளியிட்டவர்கள் யாரிடம் சூட்கேஸ் வாங்கினார்கள்  என்று தெரியவில்லை. அடுத்த முதல்வராக ஆவதற்கு ஜெயலலிதாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், விஜயகாந்த்துக்கு வெறும்  6 சதவீதம் தான் வாய்ப்பு இருப்பதாகவும் கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ளனர். இப்படியொரு அபத்தமான கருத்துக்  கணிப்பை வெளியிட அவர்களுக்கு என்ன நிர்பந்தமோ? எந்த கட்சியைக் குளிர வைப்பதற்காக இப்படியொரு கருத்துக் கணிப்போ? அல்லது யாரிடம் சூட்கேஸ் வாங்கினார்களோ?” எனத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

tamilisai1மக்களைத் திசை திருப்பும் செயல்- தமிழிசை!

பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனோ, “சட்டசபைத் தேர்தல் கூட்டணி குறித்து எந்த முடிவும் தெரியாத நிலையில் கருத்துக் கணிப்புகள் வெளியிடுவது மக்களைத் திசை திருப்பும் செயல்” எனக் கருத்துக் கூறியிருக்கிறார்.

2016 சட்டசபைத் தேர்தல் கருத்துக் கணிப்பு அரசியல் தலைவர்கள் மத்தியில் இப்படியொரு கொந்தளிப்பை ஏற்படுத்து விட்டது. கருணாநிதியை விட ஸ்டாலினுக்கு ஆதரவு அதிகம் என்றதும் கலைஞர்கூட திமுக-வின் மூத்த தலைவர்களை வரவழைத்து இது குறித்து ஆலோசனை செய்ததாகச் செய்தி வெளியானது.

ஆனால், ஜெயலலிதா இந்தக் கருத்துக் கணிப்பு பற்றி வாயே திறக்கவில்லை. அடுத்தும் அவர் தான் முதலமைச்சர் என்றதால் மெளனமாய் இருந்துவிட்டாரா? அல்லது நிறைகுடம் தளும்பாது என்பது போன்ற அமைதியா?

எது எப்படியோ அடுத்த தேர்தலிலும் அதிமுக தனிப் பெரும்பான்மை பெற்று, ‘மீண்டும் நானே முதலமைச்சர் ஆவேன்’ என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதைத் தான் அவரது நிதானம் பறை சாற்றுகிறது. தனித்து நின்றும் வெற்றி பெற முடியும் என்ற அசாத்தியமான துணிச்சல் அந்த அமைதிக்குப் பின்னே புலனாகிறது.

Jayaஆனால், திமுக முதற்கொண்டு மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்தேனும் ஆட்சியைக் கைப்பற்றி விட வேண்டுமென்று அல்லாடுவது அப்பட்டமாய்த் தெரிகிறது. அந்தக் கூட்டணிகள் கூட உறுதியற்றதாய்- பலவீனமிக்கதாய்த் தான் இருக்கின்றன.

இதில் அதிமுக மட்டுமே தனித்துக் கம்பீரமாய் நிற்பது போல் தெரிகிறது. கருத்துக் கணிப்பின் படி அடுத்து வரும் தேர்தலில் அதிமுகவே அருதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றாலும், அது நோஞ்சானை வென்ற பலசாலி நெஞ்சை நிமிர்த்திக் கொள்வது போன்று சிறப்பற்றது தான்!

-ஜோதிமுருகன்