Home நாடு நரேந்திர மோடியுடன் பழனிவேல் புதுடில்லியில் சந்திப்பு!

நரேந்திர மோடியுடன் பழனிவேல் புதுடில்லியில் சந்திப்பு!

617
0
SHARE
Ad

modiபுதுடில்லி, செப்டம்பர் 10 – இந்திய அரசுடன் மேலும் அணுக்கமான முறையிலும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் விரும்புவதாக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று இயற்கை வள மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பழனிவேல் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தபோது, இந்தியா – மலேசியா இடையேயான இருதரப்பு உறவுகளை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல மலேசியப் பிரதமர் விரும்புவதை தெரிவித்தேன்”என்றார்.

#TamilSchoolmychoice

கடந்த 1946இல் தோற்றுவிக்கப்பட்ட,  பெருவாரியான மலேசிய இந்தியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட கட்சியான மஇகாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வரலாற்றுப் பூர்வமான நீண்டகால தொடர்புகள் இருப்பதாக, அக்கட்சித் தலைவருமான பழனிவேல் தெரிவித்தார்.

மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையயே மிக வலுவான ராஜதந்திர ரீதியிலான உறவு இருப்பதாகவும், அதை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.

“இந்த உறவில் புதிய பரிமாணத்தை, புதிய பார்வையை நாம் புகுத்த வேண்டியுள்ளது. தற்போது இந்தியாவுடனான வர்த்தகம் என்பது 13.38 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவிலேயே தேங்கிக் கிடக்கிறது. எனவேதான் இதனை மேம்படுத்த புதிய பார்வையோடு அணுக வேண்டியது அவசியமாகிறது. மலேசிய நிறுவனங்களுக்கு இந்தியாவில் செயல்படுத்தப்படும் பெரிய திட்டங்களில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதில் நமது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ஆர்வமாக, முனைப்பாக உள்ளார்,” என்றார் பழனிவேல்.

மலேசியாவில் தற்போது 35 இந்திய நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த முறை இந்தியப் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை சந்தித்தபோது மலேசியாவுக்கு ஆங்கில ஆசிரியர்களை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் நஜிப் கேட்டுக் கொண்டதை நினைவூட்டினார்.

“அடுத்த ஆண்டு ஆசியான் அமைப்புக்கு மலேசியா தலைமையேற்கும். இதன் வழி இந்தியாவுடன் அணுக்கமாகச் செயல்பட முடியும். டெல்லியில் பருவநிலை மாற்ற மையம் அமைக்கப்பட்டிருப்பதாக அறிகிறேன். மலேசியாவில் உள்ள அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க இந்திய அரசு வனத்துறை மற்றும் பருவநிலை மாற்ற நிபுணர்களை அனுப்பி வைக்க வேண்டும் என விரும்புகிறோம். மேலும் இந்திய தொழில்நுட்ப மையத்தை (ஐஐடி) மலேசியாவிலும் அமைக்க வேண்டும் என விரும்புகிறோம்,” என்று டத்தோஸ்ரீ பழனிவேல் மேலும் தெரிவித்தார்.

narendra-modiமலேசியா வருமாறு பிரதமர் நஜிப் அழைப்பு; நரேந்திர மோடி ஏற்பு

இதற்கிடையே மலேசியாவிற்கு வருகை தர வேண்டும் என பிரதமர் நஜிப் அழைப்பு விடுத்ததாக இந்தியப் பிரதமர் மோடியிடம் டத்தோஸ்ரீ பழனிவேல் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

“இரு தலைவர்களுக்கும் வசதியான ஒரு நேரத்தில் மலேசியாவுக்கு வருகை தர இருப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்,” என்று பழனிவேல் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.