வாஷிங்டன், செப்டம்பர் 10 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க அமெரிக்க அதிபர் ஒபாமா, சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளார்.
உலகின் அனைத்து பகுதிகளிலும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ நினைக்கும் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகள், உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் தீவிரவாத செயல்களை ஏற்படுத்தி, பல பகுதிகளைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கிய அவர்கள் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தனி நாடாக அறிவித்தனர்.
அந்த பகுதிகளில் மக்களின் இயல்பு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா ஈராக்கிற்கு உதவ முன்வந்தது. அங்கு புதிய ஆட்சியை ஏற்படுத்த திட்டமிட்ட ஒபாமா, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
கடும் சண்டைகள் நடைபெற்று வரு நிலையில், அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கத்தில், தீவிரவாதிகள் இரண்டு அமெரிக்க பத்திரிக்கையாளர்களை கழுத்தறுத்து கொலை செய்தனர்.
இதன் காரணமாக கடும் கொந்தளிப்படைந்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க கைகோர்த்துள்ளன. சுமார் 10 நாடுகள் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒழிக்க போர் கால நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளன.
இதற்காக அமெரிக்கா சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான நாடாளுமன்ற ஒப்புதல் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.