லடாக், செப்டம்பர் 22 – ஜம்மு-காஷ்மீரின் லடாக்கில் ஊடுருவியுள்ள சீன ராணுவத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு கூடாரம் அமைத்து தங்கியிருப்பதால் பதற்றம் நிலவியுள்ளது.
லடாக்கை அடுத்துள்ள லே பகுதியில் இருந்து 300கி.மீ. தொலைவில் உள்ள ஷுமரியிலி பாய்ண்டில் டர்ட்டிஆர் என்ற இடத்திற்கு வாகனம் மூலம் வந்த அவர்கள் 7-க்கும் மேற்பட்ட கூடாரங்களை அமைத்து தங்கியுள்ளனர்.
இந்திய பகுதியான அங்கிருந்து சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் நிகழும் நிகழ்வுகளை கண்காணிக்க முடியும். அதை தடுக்கும் வகையில் முகாமிட்டுள்ள சீன ராணுவத்தினரை அங்கிருந்து வெளியேறும்படி இந்திய வீரர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் வெளியேற மறுத்துவிட்ட சீன ராணுவத்தினர் அது சீனாவின் பகுதி என்பதால் இந்திய ராணுவத்தினர் தான் வெளியேற வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். இதை அடுத்து சற்று தொலைவில் இந்திய வீரர்களும் முகாமிட்டு சீன ராணுவத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் ஷுமர் பகுதியில் உணவு பொட்டலங்களை வீசிவிட்டு சென்றனர். கூடாரத்தில் இருக்கும் சீன வீரர்கள் உணவு பொட்டலங்களை சேகரித்து வைத்துக்கொண்டதால் அவர்கள் உடனடியாக முகாமை காலிசெய்ய வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
இதே போல் ஷூமரியில் உள்ள மற்றொரு மலைபகுதியில் சீன ராணுவத்தினர் 35 பேர் முகாமிட்டுள்ளனர். இதனால் லடாக் பகுதிக்கு கூடுதல் படை அனுப்ப இந்திய ராணுவம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் லடாக்கில் கடும் பதற்றம் நிலவுகிறது.