Home நாடு நஜிப் உறுதி மொழியால் சீன, தமிழ்ப் பள்ளிகள் நிலைப்பது உறுதியானது

நஜிப் உறுதி மொழியால் சீன, தமிழ்ப் பள்ளிகள் நிலைப்பது உறுதியானது

517
0
SHARE
Ad

Najib Tun Razakகோலாலம்பூர், அக்டோபர் 14 – நாட்டில் இயங்கக் கூடிய சீன, தமிழ் தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக அவ்வப்போது அம்னோ தலைவர்கள் யாராவது குரல் கொடுப்பதும் பின்னர் பிரதமரோ, துணைப் பிரதமரோ அத்தகைய பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என உறுதி மொழி வழங்குவதும், தேசிய முன்னணி அரசாங்கத்தில் தொடர்ந்து ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் சம்பவங்கள்.

அதேபோன்று, கடந்த சில நாட்களாக, சீன மொழிப் பள்ளிகளுக்கு எதிராக சில கருத்துகள் உதிர்க்கப்பட்டு, அதற்குப் பதிலாக மலேசிய சீனர் சங்கத்தின் சார்பில் தேசியத் தலைவர் முதற்கொண்டு அதன் பல நிலைத் தலைவர்கள் கடுமையான பதிலடிகள் கொடுப்பது தகவல் ஊடகங்களை ஆக்கிரமித்து வந்தது.

ஆனால், நாட்டில் உள்ள சீன ஆரம்பப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த சர்ச்சை ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

#TamilSchoolmychoice

கூட்டரசு அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் கீழ் வருவதால் தாய்மொழிப் பள்ளிகள் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று  மசீசவின் 61ஆவது ஆண்டு பேராளர் மாநாட்டை கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 12ஆம் தேதி  துவக்கி வைத்தபோது அவர் கூறினார்.

“மலாய் மொழியை கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று மட்டுமே நான் கேட்டுக் கொள்கிறேன்,” என்றார் நஜிப்.

பல மொழிகளில் பேசும் மசீசவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியோ தியோங் லாய் சீன சமுதாயத்தினருக்கு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குவதாக பிரதமர் பலத்த கரவொலிகளுக்கு மசீச பேராளர் மாநாட்டில் பேசும்போது குறிப்பிட்டார்.

“சற்று முன்னர்தான் லியோ தனது முழு உரையையும் மலாய் மொழியில் ஆற்றினார். ஆனால் அவர் படித்தது சீனப் பள்ளியில்…” என்று நஜிப் கூறியபோது  அரங்கமே பேராளர்களின் கரவொலியால் மீண்டும் அதிர்ந்தது.

அண்மையில் பெட்டாலிங் ஜெயா உத்தாரா அம்னோ கிளையின் துணைத் தலைவர் முகமட் அஸ்லி மொஹேமெட் சாட், சீன ஆரம்பப் பள்ளிகளை மூடுவதற்கான தீர்மானம் ஒன்றை அடுத்த மாதம் கூடவுள்ள அம்னோ பேரவையில் கொண்டு வர வேண்டும் என கூறி இருந்தார்.

இதனைத் தொடர்ந்துதான் பிரதமர் நஜிப், மசீச கூட்டத்தில் சீன ஆரம்பப் பள்ளிகள் குறித்த உறுதிமொழியை வழங்கி இருக்கின்றார்.

இதனால், எதிர்வரும் அம்னோ பேரவையில் சீன, தமிழ்ப் பள்ளிகளுக்கு எதிரான தீர்மானங்கள் எதுவும் முன்மொழியப்படாது என எதிர்பார்க்கப்படுகின்றது.