கோலாலம்பூர், அக்டோபர் 15 – மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் இதுவரை 1400 இணையதளங்களை முடக்கவோ, மூடவோ செய்துள்ளது என்று அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் ஷாபெரி சிக் தெரிவித்தார்.
இக்குறிப்பிட்ட இணையதளங்கள் குறித்து எண்ணற்ற புகார்கள் வந்ததாக அவர் கூறினார்.
“தகவல்களை அறிந்து கொள்ளும் சுதந்திரத்தை வழங்கும் அதே வேளையில், அது சட்டத்திற்குட்பட்டு இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இந்தாண்டு சமூக ஊடகங்கள் தொடர்பில் 1225 புகார்கள் கிடைக்கப் பெற்றன. எனினும் இந்த எண்ணிக்கை என்பது, நாடு முழுவதும் இணையத்தைப் பயன்படுத்தும் 19.2 மில்லியன் மக்களின் எண்ணிக்கையில் வெறும் 0.006 விழுக்காடுதான். எனவே இப்புகார்கள் தொடர்பாக 1400 இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று நாடாளுமன்றத்தில் ஊடகச் சுதந்திரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அகமட் ஷாபெரி சீக் பதிலளித்தார்.
முகநூல் தொடர்பான அவதூறு புகார்களின் எண்ணிக்கையே அதிகமுள்ளது என்று குறிப்பிட்ட அவர், உலகம் முழுவதும் மிக அதிக எண்ணிக்கையிலான முகநூல் பயனர்கள் உள்ள நாடுகளில் மலேசியாவும் ஒன்று எனச் சுட்டிக்காட்டினார்.
“மலேசியாவில் மட்டும் 15 மில்லியன் முகநூல் உறுப்பினர்கள் உள்ளனர். பலர் வேறு பெயர்களை பயன்படுத்தி, அடையாளம் காண முடியாதவர்களாக உள்ளனர். எனவே அவர்களைக் கண்டறிவது கடினமாக உள்ளது. இதுவரை சமூக ஊடகங்கள் தொடர்பிலான புகார்களின் பேரில் 11 பேர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்,” என்றார் அகமட் ஷாபெரி சீக்.