கோலாலம்பூர், நவம்பர் 12 – சிலாங்கூர் அம்னோவில் நடைபெற்ற குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று சிலாங்கூர் அம்னோ தலைவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு புதியவர்களுக்கு வழி விட வேண்டும் என்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்.
அரசியல்வாதிகள் சாகும் வரை பதவியில் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடாது என்றும் மகாதீர் கூறி வருகின்றார்.
இருக்கும் தலைவர்களால் மாற்றம் உண்டாக்க இயலாத நிலையில், புதியவர்களை அப்பதவியில் அமர வைத்து மாற்றத்தை ஏற்படுத்துவதே சிறந்தது என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த தேர்தலில் சிலாங்கூர் அம்னோவிற்கு தலைமை வகித்த பிரதமர் நஜிப் துன் ரசாக் தான் சிலாங்கூர் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்க வேண்டுமா என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள மகாதீர், அதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
என்னைப் பொறுத்தவரை, பதவியில் இருக்கும் ஒருவரால் தனது நிர்வாகத்தை திறம்பட வழி நடத்த இயலவில்லை என்றால் ஒதுங்கிக் கொண்டு பிறருக்கு வழி விடுவதே சிறந்தது. நான் பதவி விலகினேன். எனது பதவியை இன்னொருவருக்கு கொடுத்தேன். அதுவே ஒரு சிறந்த தலைவருக்கான அடையாளம் என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.