இஸ்லாமாபாத், டிசம்பர் 12 – பாகிஸ்தானை துண்டாடி, வங்கதேசம் என்ற தனி நாட்டை உருவாக்கித் தந்த இந்தியாவுக்கு, பாகிஸ்தான் அளித்த பதிலடிதான் கார்கில் போர் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார்.
1970-களில் பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். இதன் காரணமாக, 1971-ம் அங்கு உச்சகட்ட உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இந்த விடுதலைப் போராட்டத்துக்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்தது.
பாகிஸ்தான் இராணுவத்தால் விரட்டியடிக்கப்பட்ட வங்காளதேச போராளிகள், அகதிகளாக இந்தியாவில் தஞ்சம் அடைந்தனர். இதன் காரணமாக, இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட வங்காளதேச மக்களுக்கு உதவும் வகையில் பாகிஸ்தான் மீது இந்தியா போர் அறிவித்தது. இந்தப் போரில் பாகிஸ்தான் தோற்கடிக்கப்பட்டு, வங்காளதேசம் என்ற புதிய தனிநாடு உதயமானது.
இதற்கு பழி தீர்ப்பதற்காகவே, கடந்த 1999-ம் ஆண்டு கார்கில் போர் தொடுக்கப்பட்டதாக முஷரப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-
“பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசத்தை பிரித்து, சியாச்சின் பகுதியை கைப்பற்ற இந்தியா முயற்சித்து. மேலும், அதைப்போன்ற பல்வேறு தாக்குதல்களையும் பாகிஸ்தானில் நடத்த இந்தியா திட்டமிட்டது. இதன் விளைவாகவே கார்கில் போர் ஏற்பட்டது.”
“எல்லா நிலைகளிலும் பதிலுக்கு பதில் என்ற கொள்கையில் நான் நம்பிக்கை கொண்டவன். இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று மதிப்பளித்தால் மட்டுமே இந்தியாவுடனான நட்பு என்பது சாத்தியப்படும். நட்புக்கான பாதையை நோக்கி இந்தியா ஒரு அடி முன்னேறி வந்தால், பாகிஸ்தான் இரண்டு அடி முன்னேறிச் செல்லும்.”
“இந்தியாவோடு நட்பு பாராட்ட நான் விரும்பவில்லை என்று மக்கள் நினைக்கின்றனர். இது என் மீது திணிக்கப்பட்ட தவறான அபிப்ராயம். எனது பதவிக்காலத்தில், இந்தியாவுடனான உறவு நல்ல முறையில் இருந்தது”.
“நரேந்திர மோடியின் தலைமையிலான தற்போதைய அரசு அமைந்துள்ள நிலையிலும் இந்தியாவுடன் நட்புறவு கொள்வது என்பது சாத்தியமானதே.”
“ஆனால், அந்த நட்பானது, இந்தியாவுக்கு அடிபணிந்தோ, அவர்களின் ஆக்ரோஷமான நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டோ அமையக் கூடாது. ஆக்ரோஷமான நடவடிக்கைகளை அவர்கள் தொடர்ந்தால் பதிலடி கொடுக்க நாமும் தயாராக இருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.