ஜாகர்த்தா, டிசம்பர் 29 – இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு சென்றபோது மாயமான ஏர் ஆசியா விமானம் கடலில் விழுந்து, அதன் ஆழப் பகுதியில் புதையுண்டிருக்கக் கூடும் என இந்தோனேசிய தேசிய மீட்பு மற்றும் தேடுதல் குழுவின் தலைவர் பம்பாங் சொலிஸ்ட்யோ தெரிவித்துள்ளார்.
இன்று தொடர்ந்த தேடுதல் பணிகளில் மீட்புக் குழுவினர் பத்தாம் தீவுக்கு அருகில், இந்தோனேசிய போர்க்கப்பலில் இருந்து புறப்பட ஆயத்தமாகும் காட்சி.
ஜாகர்த்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விமானத்தில் இருந்து கடைசியாக பெறப்பட்ட தகவல்கள் மற்றும் ரேடார் விவரங்களை வைத்துப் பார்க்கும்போது, இத்தகைய முடிவிற்கு வர வேண்டியுள்ளதாகக் கூறினார்.
“இது தொடக்க நிலையில் எழுந்துள்ள அனுமானம் மட்டுமே. எனினும் தேடுதல் பணியின்போது இது தொடர்பாக மேலும் உறுதி செய்ய முடியும். ஆழ் கடலில் உள்ள விமானத்தை மீட்பதற்கான நவீன தொழில் நுட்ப வசதிகள் இந்தோனேசியாவிடம் இல்லை. எனவே தேவைப்படும் பட்சத்தில் பிற நாடுகளிடம் இது தொடர்பில் உதவிகளை கேட்டுப் பெறுவோம்,” என்றார் பம்பாங் சொலிஸ்ட்யோ.
தேடுதல் பணிக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து வெளியுறவு அமைச்சருடன் கலந்தாலோசித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இவ்விஷயத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்தோனேசியாவுக்கு உதவ முன் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
ஏர் ஆசியா தேடுதல் பணிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அவசர முகாம் அறைக்கு வருகை தந்த இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ மீட்புக் குழுவின் தலைவர்களிடம் நிலைமை குறித்து விளக்கம் கேட்டறிந்தார்.
மேலே உள்ள படத்தில் அதிபருக்கு வலது புறத்தில் ஆரஞ்சு வண்ண சட்டையுடன் காட்சியளிப்பவர் இந்தோனேசிய தேசிய மீட்பு மற்றும் தேடுதல் குழுவின் தலைவர் பம்பாங் சொலிஸ்ட்யோ ஆவார்.