பெங்காலான் பன், ஜனவரி 1 – மோசமான வானிலை காரணமாக கடலில் விழுந்த ஏர் ஆசியா விமானத்தை தேடும் முயற்சியை முழு வீச்சில் தொடர முடியாமல் மீட்புக் குழுவின் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கடல் கொந்தளிப்பு காரணமாக விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடிப்பிடிக்க ஒரு வாரமாகக் கூடும் என இந்தோனேசிய விமானப் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“கடைசியாக கிடைத்த தகவல் சரியாக இருக்குமென நம்புகிறேன். விமானம் கண்டு பிடிக்கப்பட்டதாகக் கருதுகிறேன். எல்லோருமே கூட்டாக நம்புவோம். இது மிகவும் முக்கியம்,” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஏர் ஆசியா தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ்.
விமானம் இருக்கும் இடம் குறித்த சந்தேகங்கள் நீடிப்பதால், அதன் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடிக்க ஒரு வாரமாகலாம் என இந்தோனேசியாவின் போக்குவரத்து பாதுகாப்புக்கான தேசிய குழுவின் அதிகாரியான டூஸ் சேனிடியோசோ கூறுகிறார்.
“முதலில் விமான பாகங்கள் அதிகமுள்ள பகுதியை துல்லியமாகக் கண்டறிய வேண்டும். அதன் பிறகே கறுப்புப் பெட்டியைத் தேட முடியும். இதுவரை கருப்புப் பெட்டியில் இருந்து எந்தவிதமான ஒலிக்குறிப்புகளும் வெளியாகவில்லை. கருப்புப் பெட்டியைக் கண்டுபிடிக்க இரு வழிமுறைகள் உள்ளன. அதில் ஒன்று, விமானப் பாகங்கள் அதிகமுள்ள இடத்தைக் கண்டறிவது,” என்கிறார் சேனிடியோசோ.