கோலாலம்பூர், ஜனவரி 3 – தேர்தல் செல்லாது என அறிவிக்கப்பட்ட இரண்டு மஇகா கிளைகளின் (மெர்லிமாவ் உத்தாரா, ரூமா பங்சா பெக்கிலிலிங் செலாத்தான்) ஆண்டுக் கூட்டத்தை நடத்துவதற்கு சங்கப் பதிவகம் மஇகா தலைமையகத்திற்கு விதித்த 30 நாட்கள் காலக்கெடு எதிர்வரும் ஜனவரி 5ஆம் தேதி திங்கட்கிழமையோடு முடிவடைகின்றது.
இந்த நிலையில் சங்கப் பதிவகம் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்ற பரபரப்பு மஇகா வட்டாரங்களில் பரவி வருகின்றது.
கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மஇகா தலைமையகத்திடம் வழங்கப்பட்ட கடிதத்தில் சங்கப் பதிவதிகாரி அடுத்த 30 நாட்களுக்குள் இரண்டு மஇகா கிளைகளின் ஆண்டுப் பொதுக் கூட்டம் மீண்டும் நடத்தப்பட வேண்டும் எனவும், அடுத்த 60 நாட்களுக்குள் சில தொகுதிகளின் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும்,அடுத்த 90 நாட்களுக்குள் மத்திய செயலவை உறுப்பினர்களுக்கான, தேசிய உதவித் தலைவர்களுக்கான தேசிய நிலையிலான மறுதேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.
இவற்றில் முதல் கட்ட காலக்கெடு எதிர்வரும் திங்கட்கிழமையோடு முடிவடைவதால், இதுவரை சங்கப் பதிவகத்தின் உத்தரவை செயல்படுத்தாத மஇகா தலைமையகம் மீது சங்கப் பதிவகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது – கட்சியின் பதிவு ரத்து செய்யப்படுமா – என்பது போன்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன.
இதற்கிடையில், சங்கப் பதிவகம் முதல் எச்சரிக்கைக் கடிதத்தை மஇகா தலைமையகத்திற்கு அனுப்பியுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கைக் கடிதத்தை மஇகா தலைமைச் செயலாளர் ஏ.பிரகாஷ் ராவ் பெற்றிருக்கின்றார் என மஇகாவின் தேசியத் தகவல் பிரிவுத் தலைவர் சிவசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அந்தக் கடிதத்தின் உள்ளடக்கங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இந்தக் கடிதத்தில் மேலும் 5 தொகுதிகளுக்கான மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சங்கப் பதிவதிகாரி அறிவித்திருப்பதாக ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஓர் மலாய் இணைய செய்தித் தளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின் படி பாடாங் செராய், கோல லங்காட், தெலுக் இந்தான் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சங்கப் பதிவகம் இரண்டாவது கடிதத்தில் உத்தரவிட்டிருக்கின்றது என சிவசுப்பிரமணியம் தெரிவித்திருக்கின்றார். மற்ற இரண்டு தொகுதிகள் யாவை என்பது இன்னும் தெரியவில்லை.
சர்ச்சைக்குரிய மத்திய செயலவைக் கூட்டம் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற்று முடிந்தபோது “நானும் துணைத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியமும் அடுத்த வாரம் சங்கப் பதிவதிகாரியைச் சந்திப்போம்” என பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பகிரங்கமாக அறிவித்தார் பழனிவேல்.
ஆனால், இரண்டு வாரங்கள் கடந்தும், இதுவரையில் அவ்வாறு சந்தித்தார்களா என்பது பற்றி பழனிவேல் வாய் திறக்கவே இல்லை.
சரி, அவர்தான் வாய் திறக்கவில்லை என்றால், துணைத் தலைவர் டாக்டர் சுப்பிரமணியமும் கூட இதுபற்றி எந்தக் கருத்தும் சொல்லாமல் இருக்கின்றார் என்பது மஇகா வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
ஓர் ஆங்கிலப் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் மட்டும், மறுதேர்தல் இல்லாமல் தற்போதைய மஇகா பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்வோம் என்று மட்டும் டாக்டர் சுப்ரா கூறியிருக்கின்றார்.
இப்படியாக, மஇகாவின் மறுதேர்தல் பிரச்சனைகள் இன்னும் முடிவடையாமல் நீட்டித்துக் கொண்டே போகிற நிலையில், முதல் கட்ட காலக்கெடு திங்கட்கிழமையோடு முடிவடைதால்,
சங்கப் பதிவதிகாரி எத்தகைய நடவடிக்கையை அடுத்து மேற்கொள்ளப் போகின்றார்? –
தேசிய முன்னணியின் தொடக்க கால பங்காளிக் கட்சிகளில் ஒன்றான மஇகாவின் பதிவு ரத்தாகும் அளவுக்கு அந்த நடவடிக்கை கடுமையாக இருக்குமா? –
என்பது போன்ற கேள்விகள் மஇகா வட்டாரங்களில் பரபரப்பாக சுற்றி வருகின்றன.