கோலாலம்பூர், ஜனவரி 3 – சோக முடிவை சந்தித்துள்ள ஏர் ஆசியா விமானத்தில் பணிபுரிந்த விமானப் பணிப்பெண்ணின் உடல் ஜாவா கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. எனினும் அது அவரது சடலம்தானா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
கெய்ருனிசா ஹைடர் என்ற அந்த 22 வயதுடைய பணிப்பெண்ணின் உடல் சுராபாயா மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அவரது உடல்தான் என்பது உறுதி செய்யப்பட்டால், இறுதிச் சடங்கிற்காக கெய்ருனிசாவின் உடல் அவரது சொந்த ஊரான பாலெம்பாங்கிற்கு எடுத்துச் செல்லப்படும் என்று தெரியவந்துள்ளது.
“எங்களது மிக அற்புதமான, அழகான விமானப் பணியாளரின் உடல் அடையாளம் காணப்பட்டால், அவரது பெற்றோருடன் சுராபாயா வரை உடன் செல்வோம். நல்ல ஆத்மாவின் நிலை கண்டு மனம் நொறுங்கிப் போயுள்ளது,” என ஏர் ஆசியா தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்னாண்டஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அனுதாபம் தெரிவித்துள்ளார்.
விபத்தைச் சந்தித்துள்ள ஏர் ஆசியா விமானத்தில் பணியாற்றிய ஊழியர்களில் கெய்ருனிசாவும், வான்டி செத்தியாவதி ஆகிய இருவர் மட்டுமே பெண்கள் ஆவர்.
முன்னதாக கடலில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் உடலைக் கண்ட கெய்ருனிசாவின் தந்தை, அது தனது மகள்தான் என உறுதி செய்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தோனேசிய ஏர் ஆசியா விமான நிறுவனத்திற்காகப் பணியாற்றி வந்துள்ளார் கெய்ருனிசா.