கர்நாடகா, ஜனவரி 3 – ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மீதான மேன்முறையீட்டு விசாரணை வரும் ஐந்தாம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தால் நேற்று வியாழனன்று ஏற்படுத்தப்பட்ட தனிச் சிறப்பு அமர்வில் இந்த விசாரணைகள் இன்று தொடங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
எனினும் அந்த சிறப்பு அமர்வில் இடம்பெற வேண்டிய நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விடுப்பில் இருப்பதால், அவருக்கு பதிலாக நீதிபதி எச்.பில்லப்பா இன்றைய விசாரணைகளை மேற்கொண்டார்.
ஜெயலலிதா தரப்பில் இன்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் தரப்பு வாதங்களைத் தொடங்க 10 நாட்கள் கால அவகாசம் கோரினார்.
இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், விசாரணையை வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைத்தது. இதனிடையே அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்றக் கோரியும், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா மற்றும் அவர் நெருங்கிய உறவினர்களான சுதாகரன்,
இளவரசி ஆகியோருக்கு வழங்கப்பட்ட தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அன்பழகன் மற்றும் வாராகி ஆகியோர் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்திருந்தார்கள்.இந்த மனுக்கள் மீதான விசாரணையையும் அந்த அமர்வு இன்று ஏற்க மறுத்தமை குறிப்பிடத்தக்கது.