சென்னை, மார்ச் 1- முதல்வர் ஜெயலலிதாவை செங்கம் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு 10 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது.
அவர் சார்ந்த கட்சியின் கரை வேட்டி அணியாமல் சாதரண உடையில் சுரேஷ்குமார் வந்திருந்தார். சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:-
காவிரி நதிநீர் பிரச்னையில் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு அந்த விவகாரத்தில் கடந்த 20 ஆண்டுகளில் யாரும் செய்ய முடியாத சாதனையை முதல்வர் ஜெயலலிதா செய்துள்ளார். இதற்காக அவரைப் பாராட்டி நன்றி தெரிவித்தேன்.
எனது தொகுதி பிரச்னைகள் குறித்து அவரிடம் பேசினேன். அது தொடர்பான கோரிக்கை மனுவையும் அளித்தேன்.
மக்களுடைய, விவசாயிகளுடைய கோரிக்கையை தீர்த்து வைத்தது மிகப்பெரிய விஷயம். அதற்காக முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து நன்றி தெரிவித்தேன். இதில் வேறு ஒன்றுமில்லை. தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து சந்திப்பதற்கான காரணம் எனக்குத் தெரியாது என்றார் சுரேஷ்குமார்.
தேமுதிகவைச் சேர்ந்த அருண்பாண்டியன், சுந்தர்ராஜன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை ஏற்கெனவே சந்தித்துள்ளனர். மேலும், சட்டப் பேரவையில் அவர்கள் தனியாகவே அமர்ந்துள்ளனர். மற்ற தேமுதிக எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து அவர்கள் செயல்படுவதில்லை.
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் பேசிய திட்டக்குடி எம்.எல்.ஏ., தமிழழகன், தொகுதிக்கு நல்லது செய்ய விரும்புகிறவர்கள் எனது வழியைப் பின்பற்றுங்கள் என்றார். இதற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரை அடிக்கப் பாய்ந்தனர். பேரவையில் இது பெரும் பிரச்னையாக வெடித்து கைகலப்பில் முடிந்தது.
இந்த நிலையில், செங்கம் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ்குமார் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியிருப்பது தேமுதிகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.