Home நாடு “உடனடியாக பழனிவேலை விசாரணை செய்யுங்கள்” – காவல்துறைக்கு வேள்பாரி வலியுறுத்தல்

“உடனடியாக பழனிவேலை விசாரணை செய்யுங்கள்” – காவல்துறைக்கு வேள்பாரி வலியுறுத்தல்

680
0
SHARE
Ad

Vell-Paari

கோலாலம்பூர், மார்ச் 11 – அரசாங்கத்தைப் பற்றியும், இந்திய சமுதாயம் பற்றியும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அவதூறாகப் பேசுவது போன்ற காணொளி ஒன்று நேற்று மலேசியாகினி உள்ளிட்ட பல்வேறு இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு, மஇகா வட்டாரங்களில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இது குறித்து மஇகா கெப்போங் தொகுதித் தலைவரும், மஇகா முன்னாள் வியூக இயக்குநருமான டத்தோஸ்ரீ ச.வேள்பாரி இன்று பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அதில் வேள்பாரி கூறியிருப்பதாவது:-

“டத்தோ பழனி (டத்தோஸ்ரீஜி.பழனிவேல்) காவல்துறையில் புகார் அளிக்கும் வரை காத்திருக்காமல், அரசாங்கத்தைப் பாதுகாக்கும் நோக்கோடு, தேசிய காவல்படைத் தலைவர் (ஐஜிபி) இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். டத்தோ பழனியிடம் உடனடியாக வாக்குமூலம் வாங்குவதோடு, அந்த காணொளியை விசாரணை செய்து அதன் அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த காணொளியில் ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக அவதூறுகள் கூறப்பட்டிருக்கின்றன, அமைச்சரவையைச் சேர்ந்த ஒருவரால், அரசாங்கத்தை மறைமுகமாகத் தாக்கும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன என்ற கோணத்தில் விசாரணை அமைய வேண்டும்.”

“அந்த காணொளி, பிரதமருக்கும், அரசாங்கத்திற்கும் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்க இரகசியங்கள் சட்டப்பிரிவு 1972 -க்கு எதிராக, அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒருவர், ஆளும் கட்சியான தேசிய முன்னணிக்கு எதிராகவும், எதிர்கட்சியைச் சேர்ந்த பிகேஆருடன் தொடர்பில் இருப்பதை நேரடியாகவும், தேசிய முன்னணி பொதுக் கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய வியூகங்கள் மற்றும் ஆவணங்கள் பற்றியும் அந்த காணொளியில் பேசியுள்ளார்.”

“அந்த காணொளியை ஆய்வு செய்ததில், அதில் பேசியிருப்பவரின் குரலும், உடல்மொழியும், சைகைகளும் மிகச் சரியாகப் பொருந்துகின்றன. என்றாலும், நான் தடயவியல் நிபுணர் இல்லை. எனவே காவல்துறை அந்த காணொளி குறித்து ஆய்வு செய்யும் வரை காத்திருக்க வேண்டும். உடனடியாக டத்தோ பழனியின் குரலை பதிவு செய்து ஒரு நிபுணர் கொண்டு அதை ஆய்வு செய்யும் படி காவல்துறையைக் கேட்டுக்கொள்கின்றேன்.”

“ஒருவேளை அந்த காணொளி உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்திய சமுதாயம் மற்றும் தேசிய முன்னணிக்கு எதிராக பேசியிருக்கும் டத்தோஸ்ரீ பழனியின் செயல் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று”

“இதனிடையே, தனியார் தடயவியல் நிபுணர் ஒருவரை அமர்த்தி, தேசிய முன்னணி மற்றும் மஇகாவிற்காக, அந்த காணொளியை ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கின்றேன்” இவ்வாறு டத்தோஸ்ரீ வேள்பாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த காணொளியில் பேசியது தான் இல்லை என்றும், தனது  பெயருக்கு களங்கும் விளைவிக்கும் நோக்கில் பொய்யாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நேற்று மறுப்பு அறிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.